உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் மொஹமட் சேஷார்ட்

2403

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான மொஹமட் சேஷாட், முழங்கால் உபாதை காரணமாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

பந்துவீச்சில் பிரகாசித்து, துடுப்பாட்டத்தில் ஏமாற்றினோம் – குல்படீன் ஆதங்கம்

இலங்கை அணிக்கெதிராக பந்துவீச்சில் தமது வீரர்கள்…..

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி, இதுவரையில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வியுற்ற ஆப்கான் அணி, தங்களுடைய இரண்டாவது போட்டியில் இலங்கை அணியுடன் தோல்வியடைந்தது. இவ்வாறன நிலையில், அவர்களின் முதல் நிலை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மொஹமட் சேஷார்ட் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளமை அணிக்கு அடுத்தடுத்த போட்டிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொஹமட் சேஷார்ட், பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் போது முழுங்கால் உபாதைக்கு முகங்கொடுத்தார். எனினும், உலகக் கிண்ண முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடியிருந்தார். இந்த நிலையில், அவரது உபாதை தீவிரமடைந்துள்ள நிலையில், முழு உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் சேஷார்ட் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியை பொருத்தவரை அதிரடியான துடுப்பாட்ட வீரராக அறியப்படும் மொஹமட் சேஷார்ட், எதிரணிகளின் பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் அழுத்தத்தை கொடுக்கக்கூடியவர். எனினும், இந்த உலகக் கிண்ணத் தொடரின் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்த இவர், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 7 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்திருந்தார்.

இதேவேளை, மொஹமட் சேஷார்ட் அணியிலிருந்து விலகியுள்ளதை உத்தியோகபூர்வமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதுடன், அவருக்கு பதிலாக இடதுகை துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான அக்ரம் அலி கில் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

Photos: Sri Lanka vs Afghanistan | ICC Cricket World Cup 2019 – Match 07

ThePapare.com | 04/06/2019 | Editing and re-using images without….

அக்ரம் அலி கில் இதுவரையில், ஆப்கானிஸ்தான் அணிக்காக 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ளதுடன்,  டெஸ்ட் போட்டியில் 7 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 6 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். அதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி 46.25 என்ற சராசரியில் 185 ஓட்டங்களை இவர் பெற்றிருந்தார்.

தற்போது, தங்களுடைய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி உலகக் கிண்ண தொடரில் தங்களுடைய அடுத்த லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை நாளைய தினம் (08) எதிர்கொள்ளவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<