சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலையின் காரணமாக 11 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுள்ளது.  

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (16) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

இந்தியாவுடனான டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு குறைவு : முரளிதரன்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்…

கடுமையான மழை காரணமாக போட்டியின் நாணய சுழற்சி மதிய போசன இடைவேளையின் பின்னரே இடம்பெற்றிருந்தது. அதில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்திருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் பாகிஸ்தானுடன் இடம்பெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்த இலங்கை இதுவரையில் தமது அயல் நாட்டு மண்ணில் எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை என்பதால் அவ்வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியுடனான இந்தப் போட்டியினை எதிர்கொண்டிருந்தது.

பாகிஸ்தானுடனான இலங்கை டெஸ்ட் குழாத்தில் அடக்கப்பட்டிருந்த வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் கெளசால் சில்வா ஆகியோர் இந்திய அணிக்கெதிரான விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குசல் மெண்டிசின் மூன்றாம் இடத்தினை லஹிரு திரிமான்னவும், கெளசால் சில்வாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இடத்தினை சதீர சமரவிக்ரமவும் அணியில் பிரதியீடு செய்கின்றனர்.

அதேபோன்று நீண்ட காலத்தின் பின்னர் சகலதுறை வீரரான தசுன் சானக்கவும் இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். முக்கியமாக, அனைவரும் எதிர்பார்த்திருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்சும் காயம் காரணமாக ஓய்வில் இருந்த நிலையில், இன்றைய போட்டியில் மீண்டும் இலங்கை அணியில் அவர் இணைந்திருந்தார்.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால்(அணித்தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா, தசுன் சானக்க, லஹிரு கமகே, சுரங்க லக்மால், ரங்கன ஹேரத்  

இந்திய அணி  

சிக்கர் தவான், லோக்கேஷ் ராகுல், செட்டெஸ்வர் புஜாரா, விராத் கோலி(அணித் தலைவர்), அஜிங்கியா ரஹானே, ரவிச்சந்திரன் அஷ்வின், ரித்திமன் சஹா, ரவீந்திர ஜடேஜா, புவ்னேஸ்வர் குமார், மொஹமட் சமி, உமேஷ் யாதவ்

போட்டியின் முதல் பந்திலேயே சுரங்க லக்மால் லோக்கேஷ் ராகுலின் விக்கெட்டினை கைப்பற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் ஓட்டமேதுமின்றி ராகுலின் துடுப்பாட்டம் முடிக்கப்பட்டிருந்தது.

அனைத்து வகைக் கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறும் சயீட் அஜ்மல்

ஆரம்பத்திலேயே விக்கெட்டினை பறிகொடுத்தமையினால் சற்று கவனமாகவே இந்திய அணியினர் தமது துடுப்பாட்டத்தினை முன்னெடுக்கத் தொடங்கினர். எனினும் மீண்டும் அபாரமாக செயற்பட்ட லக்மால் இந்திய அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவானை போல்ட் செய்தார். இறுதியாக நடைபெற்ற இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த சிக்கர் தவான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் வெறும் 8 ஓட்டங்களினையே பெற்றிருந்தார்.

தவானின் விக்கெட்டினை அடுத்து சிறிது நேரம் போட்டி போதிய வெளிச்சமின்மையினால் தடைப்பட்டிருந்தது. நிலைமை சீராக மீண்டும் தொடர்ந்த போட்டியில் இந்திய அணித்தலைவர் விராத் கோலியின் விக்கெட்டினை லக்மால் LBW முறையில் வீழ்த்தியிருந்தார்.

கோலி இந்த ஆட்டமிழப்புக்காக மூன்றாம் நடுவரின் உதவியினை நாடியிருந்த போதிலும் அது அவருக்கு கைகூடியிருக்கவில்லை. இந்திய அணியின் மூன்றாம் விக்கெட்டாக பறிபோன அணித்தலைவர் ஓட்டம் எதனையும் பெற்றிருக்கவில்லை.  

இதனையடுத்து மைதானத்தில் துடுப்பாடிக் கொண்டிருந்த செட்டெஸ்வர் புஜாரா போதிய வெளிச்சமின்மையினால் பந்தினை தன்னால் பார்க்க முடியாது உள்ளது என சைகை முறையில் நடுவரிடம் முறையிட மீண்டும் போட்டி வெளிச்சம் போதாமை கருதி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்தும் போட்டிளைய நடாத்துவதற்குரிய நிலைமை அமையாத காரணத்தினால் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் நாள் ஆட்ட நிறைவில் இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 17 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுள்ளது.

களத்தில் செட்டெஸ்வர் புஜாரா 8 ஓட்டங்களுடனும், அஜிங்கியா ரஹானே ஓட்டமேதும் பெறாமலும் நிற்கின்றனர்.

இன்றைய நாளில் ஆறு ஓவர்களை வீசிய சுரங்க லக்மால் அவற்றின் மூலம் எந்தவொரு ஓட்டத்தினையும் எதிரணிக்கு கொடுக்காமல் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 17/3 (11.5) செட்டெஸ்வர் புஜாரா 8(43)*, சுரங்க லக்மால் 0/3(6)

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்