ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் மோசமான தோல்வியை சந்தித்து முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியதற்கான முழுப் பொறுப்பையும் என்மீது சுமத்துவது அசாதாரணமாகும் என தெரிவித்துள்ள அஞ்செலோ மெதிவ்ஸ், தொடர்ந்து அணிக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை எனவும், தேவைப்பட்டால் ஓய்வு பெறுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒருநாள் அணித் தலைவராக சந்திமால் நியமனம்; மெதிவ்ஸை விலகுமாறு கோரிக்கை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள…

ஒரு வீரராகவும், அணியின் தலைவராகவும் தொடர் பின்னடைவை சந்தித்து வந்த அஞ்செலோ மெதிவ்ஸ், இம்முறை ஆசிய கிண்ணத்தில் இருந்து இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த சில தினங்களாக மெதிவ்ஸுக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் வாயிலாக காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, கேலி சித்திரங்கள் வரையப்பட்டு பல விமர்சனங்களும் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், இன்னும் 10 மாதங்களில் ஆரம்பமாகவுள்ள 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்துவதற்கு அஞ்செலோ மெதிவ்ஸ் தகுதியானவரா என்ற கேள்வியும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து பரவலாக எழுப்பப்பட்டன.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை ஒரு நாள் மற்றும் டி-20 அணித் தலைமை பொறுப்பில் இருந்து அஞ்செலோ மெதிவ்ஸை விலகிக் கொள்ளும்படி தேர்வுக் குழுவினர் கோரியிருந்ததை அடுத்து, குறித்த பதவிகளில் இருந்து தான் விலகுவதாக நேற்றைய தினம் (23) மெதிவ்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதனையடுத்து, அடுத்த மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக தினேஷ் சந்திமாலை நியமிக்க தேர்வுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான்

இலங்கை அணி தற்போது சந்தித்துள்ள…

இதேவேளை, தனது இராஜினாமா குறித்து இங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடித்தத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வுக் குழுவினர் மற்றும் பயிற்சியாளர் தன்னை ஒரு நாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதுதொடர்பில் தான் அதிர்ச்சிக்குள்ளாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணி முதல் சுற்றுடன் வெளியேறியமைக்கான முழுப் பொறுப்பும் தன்மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஆசிய கிண்ண தோல்வியின் ஒரு பங்காளியே தான் என்றும், அதன் முழுப் பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என அஞ்செலோ மெதிவ்ஸ் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

அத்துடன், சுமார் ஐந்து வருடங்களாக இலங்கை அணியின் தலைவராக கடமையாற்றினேன். குறித்த பதவியில் இருந்து கடந்த வருடம் பதவி விலகினேன். ஆனாலும், ஒரு தலைவராக குறித்த காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுடனான தொடரை 30 எனவும், இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றியதுடன், 2014 ஆசிய கிண்ணம் உள்ளிட்ட தொடர்களில் வெற்றிகளையும் தேடிக் கொடுத்தேன். ஆனால் தேர்வுக் குழுவினரும், பயிற்சியாளரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்” என மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார்.

மன்னிப்புக் கேட்டார் மெதிவ்ஸ்

ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்வி…

இறுதியாக தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தோம். ஆனால், ஆசிய கிண்ணத்தில் பெற்ற தோல்வியை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அத்துடன், உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தலைமைப் பதவியை துறப்பதற்கும், அதனை இராஜினாமா செய்வதற்கும் நான் ஒருபோதும் நினைவிக்கவில்லை எனவும் மெதிவ்ஸ் தெரிவித்தார்.

மேலும், தான் அணிக்கு சுமையாக இருக்க விம்பவில்லை எனவும், அணிக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள மெதிவ்ஸ், அணிக்கு தகுதியற்ற வீரராக தன்னைக் கருதினால் அணியில் இருந்து விலகுவதற்கு தயாராக உள்ளதாகவும் குறித்த கடிதத்தின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, இலங்கை அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள மெதிவ்ஸ், ஆசிய கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்த உடனேயே அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டதன் பிரகாரம் தான் தலைமைப் பதவியை இராஜினாமாச் செய்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

>>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<<