விறுவிறுப்புகளிற்கும், சுவாரஷ்யங்களிற்கும் எந்தவித குறைவுமின்றி நிறைவடைந்திருக்கும், 2017 ஆம் ஆண்டிற்கான ஹேர்பேர்ட் கூடைப்பந்தாட்ட கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அதி சிறப்பாக செயற்பட்டிருந்த இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகமானது, இலங்கை இராணுவப்படை அணியினரை 78-72 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி ஆறாவது முறையாக நடைபெற்றிருந்த இந்த தொடரில் சம்பியனாக மாறிக்கொண்டது.

இத்தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இலங்கை விமானப்படை மற்றும் இராணுவப்படை ஆகியவற்றின் அணிகள் அரையிறுதிப்போட்டிகளில் முறையே யாழ்ப்பாண கூடைப்பந்தாட்டக் கழகம் மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றினை வீழ்த்தி பெற்றிருந்தன.

ஹேர்பேர்ட் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் விமானப்படை மற்றும் இராணுவப்படை அணிகள்

போட்டியின் ஆரம்பத்தில் விரைவாக செயற்பட்டிருந்த இராணுவப்படை வீரர்கள் புள்ளிகள் பெறுவதை ஆரம்பித்து வைத்திருந்தனர். தொடர்ந்தும் இராணுவப்படை அணி இதே மாதிரியான விரைவான ஆட்டத்தினை தொடர்ந்திருந்தது. எனினும், முதல் கால்பகுதியின் பின்னைய நிமிடங்களில் அற்புத ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த விமானப்படை அணி முதல் கால்பகுதியினை 22:15 என்ற புள்ளிகள் கணக்கில் தமதாக்கியிருந்தது.

Airforce v Army

போட்டியின் முதல் அரைப்பகுதிக்கு முன்னரான நேரத்தில் விமானப்படை அணியினர் ஆதிக்கம் செலுத்தியிருப்பினும், தமக்கு கிடைந்திருந்த ப்ரீ த்ரோக்களை (Free Throws) தவறவிடாது சரிவர உபயோகப்படுத்தியிருந்த இராணுவ வீரர்கள் 21 புள்ளிகளை சேர்த்துக்கொண்டனர். இப்பாதியில் விமானப்படை அணி 20 புள்ளிகளை சேர்த்திருந்தது. இதனால், போட்டியின் முதல் அரைப்பகுதி 42:36 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப்படை அணியினரின் முன்னிலையுடன் முடிவுற்றது.

மூன்றாம் கால்பகுதியில் சிறந்த தடுப்பு (Defensive) ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த விமானப்படை அணி புள்ளிகள் சேர்ப்பதில் இக்கால்பகுதியில் முன்னிலை பெற்றுக்கொண்டது. மொத்தமாக 19 புள்ளிகளை சேர்த்த விமானப்படை மூன்றாம் கால்பகுதியின் முன்னிலையுடன் 61:51 என முடித்துக்கொண்டது.

தொடர்ந்து போட்டியின் இறுதிக் கால்பகுதியில் ஆடியிருந்த விமானப்படை அணி, இரு அணிகளுக்கும் இடையிலான புள்ளிகள் வேறுபாட்டினை மேலும் அதிகரித்து கொண்டு செல்ல போட்டியின் வெற்றியாளர்கள் விமானப்படை என்றே சகலரும் நினைந்திருந்தனர். எனினும், தனது முழுப் பலத்தினையும் வெளிப்படுத்திய இராணுவப்படை 21 புள்ளிகளை சேர்த்து  போட்டியின்  இறுதி நிமிடத்தில் விமானப்படை அணியுடன் 72:72 என  புள்ளிகளை சமப்படுத்த போட்டி கடும் விறுவிறுப்பாக மாறியிருந்தது.

அனைவரும் போட்டியின் வெற்றியாளர் யார் என எதிர்பார்த்திருந்த தருணத்தில் விமானப்படை வீரர் ஒசாத தனது அணிக்குரிய முன்னிலைப் புள்ளியினை பெற்றுத்தந்தார்.

தொடர்ந்து போட்டியின் இறுதி விநாடிகளில், மட்டு நகர் வீரர் வெனிட்டோ அந்தோனி மூலம் மேலதிக புள்ளிகளை சேர்த்துக்கொண்ட இலங்கை விமானப்படை அணியானது 78:72 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்களானது.

ஹேர்பேர்ட் கிண்ணத்தின் கடந்தகால ஆட்டங்களில் இரு தடவைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த விமானப்படை அணியானது அந்த இரு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் பின்னர்,  ThePapare.com உடன் சில வார்த்தைகளை விமானப்படை அணியின் பயிற்றுவிப்பாளர் சுசில் உடுகும்புற எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

சிரேஷ்ட அணிகளிற்குரிய தேசியமட்டப் போட்டிகளில் எமது அணி சம்பியன் ஆகியதன் பின்னர் வேறு போட்டிகள் எதிலும் கலந்து கொண்டிருக்கவில்லை. இந்த தொடரிற்காக நாம் சில பயிற்சி ஆட்டங்களில் மாத்திரமே ஈடுபட்டிருந்தோம். அவ்வாறனதொரு நிலையில் கிண்ணத்தினை வெற்றி கொண்டது மிகவும் சந்தோசமளிக்கின்றது. இந்த கூடைப்பந்தாட்ட தொடரும் இந்த இறுதிப்போட்டியும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது“  எனத் தெரிவித்தார்.

அதேபோன்று, இராணுவப்படை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளரா  ஹர்ஷ பெர்னாந்து கருத்து தெரிவிக்கையில்,

எமது அணியானது இத்தொடரில் பங்கேற்றிருப்பினும், யாரும் எமது அணி பற்றி பேசியிருக்கவில்லை. எல்லோரும் விமானப்படை, பொலிஸ் மற்றும் மட்டக்களப்பு அணிகள் பற்றியே கதைத்திருந்தனர். நாம் ஒரு இளம் அணியுடன் வந்தே தேசிய அளவிலான சம்பியன் பட்டத்தினை வென்றிருந்த விமானப்படை அணிக்கு சவாலாக காணப்பட்டிருந்தோம். இதே பாணியிலான ஆட்டத்தினை எமது வீரர்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்வார்களாயின் கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கையில் இருக்கும் அணிகளில் இராணுவப்படை அணி அதி சிறந்ததாக மாறும் என்பதில் ஐயமில்லை“ என்று கூறினார்.


மூன்றாம் இடத்திற்கான போட்டி: யாழ்ப்பாண கூடைப்பந்தாட்ட கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

Police v Jaffna

ஹேர்பேர்ட் கிண்ண அரையிறுதிப்போட்டிகளில் தோல்வியடைந்திருந்த இந்த இரண்டு அணிகளும் தொடரின் மூன்றாம் நிலைக்குரிய அணி யார் என்பதை தெரிவு செய்வதற்கான போட்டியில் களமிறங்கியிருந்தன.

ஆரம்பத்தில் இரு அணிகளும் சமபலத்தினை காண்பிக்கும் வகையிலமைந்த ஆட்டத்தினை விளையாடியிருப்பினும் முதல் கால்பகுதியினை 21:18 என்ற புள்ளிகள் கணக்கில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் கைப்பற்றிக்கொண்டது.

இரண்டாம் கால்பகுதியில் யாழ்ப்பாண வீரர்கள் புள்ளிகள் சேர்க்கத் தடுமாறியிருந்தனர். இதனால், போட்டியின் முதல் அரைப்பகுதி பொலிஸ் அணியின் முன்னிலையுடன் 41:30 என நிறைவடைந்தது.

மூன்றாம் கால்பகுதியில் எதிரணி தடுப்புக்களை சின்னாபின்னமாக்கி 23 புள்ளிகள் வரையில் சேர்த்திருந்த பொலிஸ் விளையாட்டுக் கழகத்தினர் மூன்றாம் கால்பகுதியையும் 64:44 என கொள்ளையடித்துக் கொண்டனர்.

போட்டியின் இறுதி கால்பகுதியில் இரு அணிகளும் சிறப்பாக செயற்பட்டிருப்பினும் முன்னைய கால்பகுதிகளில் பெற்ற புள்ளிகள் பொலிஸ் அணியை வெற்றியாளராக மாற்றியது.

முடிவில், 77:56 என்ற புள்ளிகள் அடிப்படையில் யாழ்ப்பாணத்தினை வீழ்த்திய பொலிஸ் அணியினர் தொடரில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

விருதுகள்

போட்டியின் ஆட்ட நாயகன் ரவி தொடங்கொட (விமானப்படை விளையாட்டுக் கழகம்)

தொடர் ஆட்ட நாயகன் ஓசாத (விமானப்படை விளையாட்டுக் கழகம்)

தொடரின் சிறந்த தாக்குதல் வீரர் திலான் சம்பத் (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)

தொடரின் சிறந்த தற்காப்பு வீரர் சுராஜ் பாலசூரிய (இராணுவப்படை விளையாட்டுக் கழகம்)