கடற்படையை வீழ்த்திய ரினௌன் DCL தரப்படுத்தலில் முதல் இடத்தில்

367
DCL Renown SC vs Navy SC

இரண்டாம் பாதியில் பெற்ற இரட்டை கோலினால் டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் (DCL) கடற்படை விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான ஆட்டத்தை 3-1 என்ற கோல்கள் கணக்கில் ரினௌன் விளையாட்டுக் கழகம் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் DCL தரப்படுத்தலில் ரினௌன் விளையாட்டுக் கழகம் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முன்னைய போட்டியில் ரினௌன் விளையாட்டுக் கழகம் ஜாவா லேன் அணியுடனான ஆட்டத்தை 1-1 என சமநிலையில் முடித்திருந்த அதேவேளை, கடற்படை அணியினர் பலம் மிக்க இராணுவப்படை அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தனர்.

முதற்பாதியுடன் இடைநிறுத்தப்பட்ட கிரிஸ்டல் பலஸ் மற்றும் பொலிஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

டயலொக் சம்பியன் கிண்ண சுற்றுப்போட்டியின் இவ்வாரத்திற்கான போட்டிகளில் …

இந்நிலையில் பலரதும் எதிர்பார்ப்பை பெற்றிருந்த இந்தப் போட்டி, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட செயற்கைப் புற்தரையைக் கொண்ட பெந்தகான கால்பந்து மைதானத்தில் இடம்பெற்றது.

ஆட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் சில நிமிடங்களுக்கும் ரினௌன் வீரர்கள் தம்மிடையே பந்தைப் பரிமாற்றம் செய்து விளையாடினர்.

எனினும் அவ்வணியின் பந்துப் பரிமாற்றங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கடற்படை அணியின் இளம் வீரர் மொஹமட் சஹீல் இருந்தார்.

ஆட்டம் தொடங்கி 6 நிமிடங்களில் ரினௌன் கோல் எல்லைக்கு பந்தை எடுத்துச் சென்ற சஹீலைத் தடுப்பதற்கு, ரினௌன் அணிக்கு இப்போட்டியில் கோல் காப்பாளராக செயற்பட்ட 19 வயதின் கீழ் தேசிய அணியின் முன்னாள் வீரர் ராசிக் ரிஷாட் முன்னே வந்தார்.

இதன்போது சஹீலிடமிருந்து பந்தை தட்டிவிட்டு, மீண்டும் தனது இடத்திற்கு ரிஷாட் செல்வதற்குள் வேகமாக செயற்பட்ட சஹீல், வலது புற கோணர் திசையிலிருந்து கோலுக்குள் பந்தை மிகவும் சிறந்த முறையில் செலுத்தி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே கடற்படை அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆரம்பித்திலேயே எதிரணி முன்னிலை பெற்ற நிலையிலும் ரினௌன் வீரர்கள் எந்தப் பதட்டமும் இன்றி, வழக்கம் போன்றே தமது வேகமான பந்துப் பரிமாற்றங்களை மைதானத்தில் அனைத்து பகுதிகளிலும் காண்பித்தனர்.

தொடர்ந்து ரிப்னாஸ் வழங்கிய பந்தைப் பெற்ற முஜீப் அதனை கோலுக்கு அருகில் இருந்த ஜொப் மைக்கலுக்கு வழங்கினார். எனினும், நேரடியாக கோல் நோக்கி அடிக்க வேண்டிய பந்தை அவர், தன்னிடம் வைத்து தாமதப்படுத்தியமையினால் கோலுக்கான சிறந்த வாய்ப்பு வீணடிக்கப்பட்டது.

மிகச் சிறிய நாடாக சாதனையுடன் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்ற ஐஸ்லாந்து

கடந்த ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த ஐஸ்லாந்து…

அதன் பின்னரும் ரினௌன் முன்கள வீரர்களுக்கு தொடர்ச்சியாகக் கிடைத்த பல வாய்ப்புகளும் அவ்வணி வீரர்களால் இறுதி நேரத்தில் வீணடிக்கப்பட்டன.

குறிப்பாக முஜீப், அணித் தலைவர் ரிப்னாஸ் மற்றும் ஜொப் மைக்கல் என பலரும் சிறந்த வாய்ப்புக்களை நிறைவு செய்வதில் தவறுவிட்டனர்.

மறுமுனையில் கடற்படைத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் ரினௌன் பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டன.

இந்நிலையில் முதல் பாதியின் மேலதிக நேரத்தில் ரினௌன் அணிக்கு கிடைத்த கோணர் உதையை அணித் தலைவர் ரிப்னாஸ் பெற்றார். அவர் உள்ளனுப்பிய பந்தை ட்ரவோரே மொஹமட் பாய்ந்து காலால் உதைந்து கோலக்கியதன் மூலம் முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் ஆட்டம் சமநிலையடைந்தது.

முதல் பாதி: ரினௌன் விளையாட்டுக் கழகம் 1 – 1 கடற்படை விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆரம்பமாகியதும் மேற்கொள்ளப்பட்ட சிறந்த முதல் முயற்சியாக, ரினௌனின் கோல் திசையில் வலது புறக் கோணர் திசையில் இருந்து கடற்படை வீரர் நிர்மால் விஜேதுங்க உள்ளனுப்பிய பந்து கோலைவிட சற்று அண்மித்த வகையில் வெளியே சென்றது.

மேலும் சில நிமிடங்கள் கடந்த நிலையில், ரிப்னாஸ் எதிரணியின் கோல் பகுதிக்குள் பல வீரர்களுக்கு இடையில் போராடி பலரைத் தாண்டி ஜொப் மைக்கலுக்கு பந்தை வழங்கினார். அவர் மீண்டும் பெனால்டி எல்லையினுள் இருந்த ரிஸ்னிக்கு பந்தைப் பரிமாற்றம் செய்ததும், ரிஸ்னி எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தை உருட்டி அடித்தார். எனினும் அந்த முயற்சியை நிறைவு செய்வதற்கு அங்கு யாரும் இருக்கவில்லை.

ஆட்டத்தின் 64ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து பந்தை எடுத்துச் சென்ற முஜீப் அணியின் சக வீரர் ஜொப் மைக்கலுக்கு அதனை வழங்க, மீண்டும் ட்ரவோரே மொஹமடுக்கு பந்து பரிமாற்றம் செய்யப்பட்டது. ட்ரவோரே மொஹமட் பந்தை மீண்டும் பெனால்டி பெட்டியில் இறுதி எல்லையில் இருந்த மைக்கலுக்கு வழங்கியதும் ஒரே உதையில் அவர் பந்தை கோலுக்குள் செலுத்தி அணியை முன்னிலைப்படுத்தினார்.

மேலும் இரண்டு நிமிடங்கள் கடந்த நிலையில், ரிப்னால் எதிரணியின் மத்திய களத்தில் இருந்து பந்தை கோல் நோக்கி இலக்கு வைத்து உதைகையில், அது உயர்ந்து சென்று கோல் காப்பாளர் இல்லாத திசையினால் கம்பங்களுக்குள் செல்ல, அடுத்தடுத்த இரண்டு கோல்களினால் ரினௌன் அணி முன்னிலை பெற்றது.

மீண்டும் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்தை ஜொப் மைக்கல் எடுத்துச் சென்று கோல் நோக்கி உதைய கடற்படை கோல் காப்பாளர் உதயங்க ரெஜினோல்ட் பந்தைத் தடுத்தார். அதன்போது மீண்டும் தன்னிடம் வந்த பந்தை ஜொப் மைக்கல் இரண்டாவது முயற்சியாக கோலுக்கு உதைய, அதையும் உதயங்க சிறப்பாகத் தடுத்தார்.

ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் இரு தரப்பினரும் மாறி மாறி எதிரணியின் கோல் பகுதியை ஆக்கிரமித்த போதும், அவற்றின் மூலம் கோல் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

போட்டியின் நிறைவில், இரண்டாவது பாதியில் பெறப்பட்ட இரண்டு கோல்களின் உதவியுடன் வெற்றி பெற்ற ரினௌன் அணி டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடர் புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முழு நேரம்: ரினௌன் விளையாட்டுக் கழகம் 3 – 1 கடற்படை விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் – ட்ரவோரே மொஹமட் 45’+, ஜொப் மைக்கல் 64’, மொஹமட் ரிப்னாஸ் 66’

கடற்படை விளையாட்டுக் கழகம் – மொஹமட் சஹீல் 06’

மஞ்சள் அட்டை 

ரினௌன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ரியால் 68’