இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஆசியக் கிண்ணத்தில் மூன்றாவது தொடர் வெற்றி

877

மகளிர் ஆசியக் கிண்ண T20 தொடரில் இன்று (08) மலேசியாவை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 72 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

T20 உலகக்கிண்ணங்களில் கடக்கப்பட்ட கடினமான மைல்கல்!

மேலும் இந்த வெற்றி மகளிர் ஆசியக் கிண்ண T20 தொடரில் இலங்கை அணிக்கு கிடைத்த மூன்றாவது தொடர் வெற்றியாகவும் அமைகின்றது.

இரு அணிகளும் மோதிய இந்த ஆசியக் கிண்ண போட்டி பங்களாதேஷின் சில்லேட் அரங்கில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி சாமரி அத்தபத்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததோடு, இதன்படி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 105 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ஓசதி ரணசிங்க 18 பந்துகளில் 2 பௌண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததோடு, மலேசிய அணியின் பந்துவீச்சில் அய்னா ஹம்சியா ஹாசிம் மற்றும் சஷா அஸ்மி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 106 ஓட்டங்கள் சவால் குறைந்த வெற்றி இலக்கு என்ற போதும் இதனை அடைவதற்கு துடுப்பாடிய மலேசிய மகளிர் கிரிக்கெட் அணி, ஆரம்பம் முதலே மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியதோடு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 9.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 33 ஓட்டங்களுடன் சுருண்டு போட்டியில் படுதோல்வி அடைந்தது.

மலேசிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் எல்சா ஹன்டர் அதிகபட்சமாக 18 ஓட்டங்களை எடுத்திருக்க ஏனைய வீராங்கனைகளில் ஒருவர் கூட 10 ஓட்டங்களை கூட தாண்டியிருக்கவில்லை. அத்துடன் மலேசிய அணி இப்போட்டியில் பெற்ற 33 ஓட்டங்கள் T20I போட்டிகள் வரலாற்றில் அவர்கள் பெற்ற இரண்டாவது அதி குறைந்த மொத்த ஓட்டங்களாகவும் பதிவானது.

ஹர்சித மாதவியின் அரைச்சதத்தோடு இலங்கை மகளிர் வெற்றி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சு வீராங்கனையான மல்ஷா செஹானி வெறும் 02 ஓட்டங்களை மாத்திரம் விட்டுத்தந்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, இனோக்க ரணவீர மற்றும் சுகந்திக்கா குமாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகியாக இலங்கை மகளிர் அணி வீராங்களை மல்ஷா செஹானி தெரிவாகினார். அடுத்ததாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தில் விளையாடும் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (10) பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவிருக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

முடிவு – இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 72 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<