போட்டித்தடையினைப் பெற்றுள்ள மத்திய, ஊவா மாகாண கால்பந்து வீரர்கள்

488

சுதந்திரக் கிண்ண மாகாண கால்பந்து தொடரில் மத்திய மற்றும் ஊவா அணிகள் இடையில் கடந்த புதன்கிழமை (02) நடைபெற்ற போட்டியில் ஏற்பட்ட மோதல்களுக்கு காரணமாக அமைந்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைள் குறித்தான ஊடக அறிக்கையினை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) வெளியிட்டிருக்கின்றது.

>>நிதர்சனின் ஹெட்ரிக் கோலினால் வட மாகாண அணி வெற்றி<<

ஊவா மற்றும் மத்திய மாகாண அணிகள் இடையிலான போட்டி கந்தளாய் லீலாரத்ன விளையாட்டரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இப்போட்டியில் ஊவா மாகாண வீரர் பிராஸ் ஸஹீர் போட்டியின் முதல் கோலினைப் பெற்ற பின்னர், எதிரணி வீரரினை முறையற்ற விதத்தில் தாக்கியதன் காரணமாக மைதானத்தில் மோதல் ஒன்று வெடித்திருந்தது. இதன் காரணமாக போட்டியும் சுமார் 30 நிமிடங்கள் வரை இடைநடுவில் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த மோதல் சம்பவத்திற்கு காரணமாக அமைந்தவர்களுக்கு எதிராகவே இலங்கை கால்பந்து சம்மேளனம் தமக்கு கிடைத்த அறிக்கைகள் மற்றும் காணொளி (Video) ஆதாரங்களின் அடிப்படையில், ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

அதன்படி ஊவா மாகாணத்தினைச் சேர்ந்த ஆறு வீரர்களுக்கு சுதந்திரக் கிண்ணத் தொடரில் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த தடையினைப் பெறும் வீரர்களாக ஊவா மாகாண அணியின் பிராஸ் ஸஹீர், MAM. அப்ரான், கவிந்து ரவிஹான்ச, எரன்த நந்தன, HMK. சேத்தன மற்றும் இஷான்த டில்சான் ஆகியோர் அமைகின்றனர். இந்த வீரர்கள் அனைவரும் போட்டியில் முறையற்ற நடத்தையினை வெளிப்படுத்தியமைக்காக, ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உள்ளாகுகின்றனர்.

அத்தோடு இந்த வீரர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ள இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஒழுக்காற்றுக் குழு அந்த எச்சரிக்கையில் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அடுத்த ஒரு வருடத்தினை அவகாச காலமாக (Probation Period) வழங்கி, இந்த காலப்பகுதிக்குள் மீண்டும் தவறான நடத்தையினை வெளிப்படுத்தும் பட்சத்தில் ஒரு வருடப் போட்டித்தடையினை வழங்கும் எனக் கூறியிருக்கின்றது.

மேல் மாகாணத்தை வீழ்த்திய ரஜரட; தோல்வி காணாத அணியாக கிழக்கு, சபரகமுவ

மறுமுனையில் மோதல்களுக்கு காரணமாக அமைந்த மத்திய மாகாண அணியின் கால்பந்துவீரர்களுக்கும், போட்டித்தடை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் மத்திய மாகாண அணியின் வீரர்களான WGHI. தேசப்பிரிய, SK. உமைர் மற்றும் MHH. மொஹமட் ஆகிய மூன்று வீரர்கள், சுதந்திர கிண்ண மாகாணத் தொடரில் அடுத்த இரண்டு போட்டிகளில் ஆடுவதற்கு தடையினைப் பெற்றிருக்கின்றனர். அதோடு இந்த வீரர்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டிருப்பதோடு, இந்த வீரர்களுக்கும் ஒரு வருடகாலம் அவகாச காலமாக வழங்கப்பட்டு, இந்த அவகாச காலத்திற்குள் தவறான நடத்தையினை வெளிப்படுத்தும் பட்சத்தில் இவர்களுக்கும் ஒரு வருட போட்டித்தடை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் மத்திய மாகாண அணியினைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான ஜனித் ரத்னாயக்க இன்னொருவீரரினை தாக்குவதில் பிரதான சூத்திரதாரியாக இனங்காணப்பட்டு, அவருக்கு மறு அறிவித்தல் வரும் வரையில் கால்பந்து சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட தடை வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஜனித் ரத்னாயக்கவிற்கு எதிராக இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

சொந்த மைதானத்தில் திரில் வெற்றி பெற்ற வட மாகாண அணி

இதேவேளை ஊவா மற்றும் மத்திய மாகாண அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் தங்களது அணி வீரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து அவதானமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடைக்காலம் நிறைவடையும் வரையில் அவர்களை அணிக்குழாத்தினுள் இருந்து நீக்கி வைப்பதற்கும் பணிக்கப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<