இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி மற்றும் தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கெதிரான இரண்டாவது இளைஞர் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
குருணாகலை வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நடுவரிசைத் துடுப்பாட்ட வீரர் அஷேன் பண்டார தனது கன்னிச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.
இலங்கை அணி நேற்றிரவு ஆட்ட முடிவின் போது 4 விக்கட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நேற்றைய நாள் ஆட்டத்தில் சதம் கண்டிருந்த பத்தும் நிசங்க இன்று காலை இடதுகை சுழற்பந்து வீச்சாளர் டேனியல் மொரியார்ட்டியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவர் 295 பந்துகளில் 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பண்டார, சக பாடசாலை வீரர், புனித அலோசியஸ் கல்லூரியின் நவிந்து நிர்மலுடன் இணைந்தார். இரு வலதுகைத் துடுப்பாட்ட வீரர்களும் 6ஆவது விக்கட்டுக்காக 99 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிர்மல் 115 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்றதோடு அஷேன் பண்டார 310 பந்துகளை முகம் கொடுத்து 121 ஓட்டங்களைப் பெற்றார். இருவரும் 3 பந்துகளுக்குள் தமது விக்கட்டுகளைப் பறிகொடுக்க இலங்கை 378 ஓட்டங்களுடன் தமது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது தென்னாபிரிக்க 19 வயதிற்குட்பட்டோர் அணி. 134 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த போதிலும் சிறப்பாக விளையாடி 133 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை இழந்த வேளையில் போட்டி நிறைவுக்கு வந்தது. ரெய்னார்ட் வன் டொண்டர் மற்றும் ஜோஷுவா வன் ஹீர்டன் இருவரும் 107 ஓட்டங்களை இரண்டாவது விக்கட்டுக்காகப் பெற்றுக்கொண்டனர். இறுதி வரை இலங்கை பந்துவீச்சாளர்களால் அந்த இணைப்பாட்டத்தை முறியடிக்க முடியவில்லை.
முதல் நாள் ஆட்டத்தில் மலியதேவ கல்லூரியின் தமித சில்வா 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி தென்னாபிரிக்க 19 வயதிற்குட்பட்டோர் அணியை 244 ஓட்டங்களுக்கு மட்டுப் படுத்தினார். மேலும் அஷேன் பண்டார மற்றும் பதும் நிசங்க ஆகியோரின் 210 ஓட்ட இணைப்பாட்டம் போட்டியின் போக்கைத் தீர்மானித்த முக்கிய அம்சமாகும்.
நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சமநிலையில் நடந்து முடிந்த நிலையில் போட்டித்தொடரின் மூன்றாவதும் இறுதியான போட்டி ஜூலை 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை கண்டி பல்லேகெல்லே சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.
தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் (முதல் இன்னிங்ஸ்)– 91.2 ஓவர்களில் 244 ஓட்டங்கள். ஜோஷுவா வன் ஹீர்டன் 81, ரிகார்டோ வன்கொன்சலஸ் 53, வியான் முல்டர் 63, தமித சில்வா 4/56, திலான் ப்ரஷான் 2/60, சம்மு அஷான் 2/35.
இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் (முதல் இன்னிங்ஸ்)– 90 ஓவர்களில் 378/7 ஓட்டங்கள். பதும் நிசங்க 172, அஷேன் பண்டார 121, நவிந்து நிர்மல் 33, வியான் முல்டர் 2/66, அக்கோனா மியாகா 2/56, டேனியல் மோரியார்டி 2/98.
தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் (இரண்டாவது இன்னிங்ஸ்) 47 ஓவர்களில் 133/1 ஓட்டங்கள். ரெய்னார்ட் வன் டொண்டர் 63*, ஜோஷுவா வன் ஹீர்டன் 49*.




















