இந்தியாவுக்கு எதிரான T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவுஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க துடுப்பாட்ட வீரரான ட்ராவிஸ் ஹெட் விடுவிக்கப்பட்டுள்ளார்.
>>ஐசிசி மகளிர் உலகக்கிண்ணத்தை வென்றது இந்திய அணி<<
இந்த ஆண்டின் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்காக தயாராகும் நோக்கில், அவுஸ்திரேலியா தமது வீரர் குழாத்தினை தயார் செய்து வருகின்றது.
இந்த நிலையிலையே ஹெட்டிற்கு உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரான ஷெபீல்ட் ஷீல்டில் விளையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
நவம்பர் 21ஆம் திகதி பேர்த்தில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ட்ராவிஸ் ஹெட் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கி எடுத்த முடிவுக்கு அமையவே அவரை இந்திய அணிக்கு எதிரான T20 தொடரில் இருந்து விலகி, ஷெபீல்ட் தொடரில் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ராவிஸ் ஹெட் ஒரு புறமிருக்க வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசல்வூட் மற்றும் ஷோன் அபோட் ஆகியோரும் ஏற்கனவே ஆஷஸ் தொடருக்காக தயாராகும் விதமாக தங்களது உள்ளூர் அணிகளுடன் இணைந்து, ஷெபீல்ட் தொடரில் ஆடி வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேநேரம் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் காணப்படுவதோடு, தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளும் கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் முறையே நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















