2027ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள AFC ஆசியக் கிண்ண கால்பந்து தொடருக்கு, தகுதி பெறும் நம்பிக்கையை தாய்லாந்து இலங்கை அணியை 4–0 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வலுப்படுத்தியிருக்கின்றது.
>>கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக டிம் சௌத்தி நியமனம்!<<
ஆசியக் கிண்ண கால்பந்து தொடரிற்கு தெரிவாக இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் கொண்டதாக அமைந்த மோதல் நேற்று (18) கொழும்பு ரேஸ் கோர்ஸ் அரங்கில் இடம்பெற்றது. இப்போட்டியில் சுகவீனமுற்ற இலங்கை கால்பந்து அணியின் தலைவர் சுஜன் பெரேராவிற்குப் பதிலாக கவீஷ் பெர்னாண்டோ, இலங்கைத் தரப்பினை வழிநடாத்தியிருந்தார்.
தொடக்கத்திலிருந்தே ஆக்கிரமிப்பாக விளையாடிய தாய்லாந்து, போட்டி தொடங்கி ஏழாவது நிமிடத்தில் முன்னிலை பெற்றது. தனவாட் சுவாங்சிட்டவோன் நீண்ட தூரத்தில் இருந்து உதைந்த பந்து கவீஷை தாண்டி கோல் பெட்டியில் வீழ்ந்து முதல் கோலானது.
இதற்குப் பின்னர், இலங்கைக்கு முதல் கோல் பெறும் வாய்ப்பினை ஜேசன் தாயாபரன் பெற்றுக் கொடுத்த போதும் அது வீணாகியது. மழையின் தாக்கம் காரணமாக முதல் பாதியின் இறுதி நிமிடங்கள் மந்தமாக சென்றது. தேறசாக் பொய்பிமாய், தாய்லாந்து அணிக்காக 39ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் ஒன்றை பெற முயன்ற போதும் அது சாத்தியப்படவில்லை.
முதல்பாதி: இலங்கை 0 – 1 தாய்லாந்து
ஆட்டத்தின் முதல்பாதியினை அடுத்து, இடைவேளைக்குப் பிறகு இலங்கை சில மாற்றங்களை செய்து கோல்களைப் பெற முயன்ற போதும் அது கைகூடாமல் போயிருந்தது.
தொடர்ந்து இலங்கை கால்பந்து அணிக்கு எதிராக 65ஆவது நிமிடத்தில் தாய்லாந்தின் இரண்டாவது கோல் பெறப்பட்டது. ஜூட் சூன்சப்–பெல் தனது தலையால் பந்தினை முட்டி சிறப்பான முறையில் கோலினைப் பதிவு செய்தார்.
மீண்டும் தலையினால் முட்டி பெறப்பட்ட கோல் ஒன்றின் மூலம் தாய்லாந்து 77ஆவது நிமிடத்தில் தமது கோல்கள் கணக்கை 3–0 ஆக உயர்த்தியது. இம்முறை பன்சா ஹெம்விபூன் குறித்த கோலுக்கு சொந்தக்காரராக மாறினார்.
அடுத்து, 90ஆவது நிமிடத்தில் சூன்சப்–பெல் தனது இரண்டாவது கோலையும் அடித்து, தாய்லாந்திற்கு 4–0 என்ற கோல்கள் கணக்கில் உறுதியான வெற்றியைப் பதிவு செய்தார்.
முழுநேரம்: இலங்கை 0 – 4 தாய்லாந்து
இந்தப் போட்டியில் தோல்வியினைத் தழுவிய இலங்கை கால்பந்து அணிக்கு, ஆசியக் கிண்ண கால்பந்து தொடரிற்கான வாய்ப்பு அஸ்தமனமாகியிருக்க, தாய்லாந்து அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி துர்க்மனிஸ்தானுடன் ஆடும் தகுதிகாண் போட்டியின் முடிவினை அடிப்படையாகக் கொண்டு ஆசியக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கெடுக்கும் வாய்ப்பு தீர்மானிக்கப்படவிருக்கின்றது.
>>மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க<<




















