இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடத்தும் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (02) ஆரம்பமானது. இதன் முதலிரு போட்டிகளிலும் கொழும்பு எதிர் தம்புள்ளை அணிகளும் கண்டி எதிர் காலி அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. கொழும்பில் நடைபெற்ற பரபரப்பான இந்த இரு போட்டிகளும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டதால் குறைந்த ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டன.
தம்புள்ளை எதிர் கொழும்பு
இலங்கை தேசிய அணியில் நிரந்த இடம் பிடிக்க தொடர்ந்து போராடி வரும் லஹிரு திரிமான்ன பெற்ற அதிரடி சதத்தின் மூலம் தம்புள்ளை அணியுடனான போட்டியில் கொழும்பு அணி டக்வர்த் லுவிஸ் முறையில் 4 ஓட்டங்களால் பரபரப்பு வெற்றி ஒன்றைப் பெற்றது.
மாலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட்
இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று(02) முதல் இடம்பெறும் மாகாண மட்ட (சுப்பர் ப்ரொவின்சியல்) 50 ஓவர்கள் போட்டித் தொடரில் பங்கேற்காவிட்டால் எதிர்வரும் காலங்களில்
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக தாமதித்தே ஆரம்பமானது. இதனால் அணிக்கு 40 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு அணித்தலைவர் திசர பெரேரா, எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.
எனினும் தம்புள்ளை அணித்தலைவராக ஆரம்ப வீரர் குசல் ஜனித் பெரேரா மீண்டும் ஒருமுறை அதிரடியாக ஆடி வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். 40 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 8 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
மத்திய வரிசையில் அஷான் பிரியன்ஜன் வேகமாக 50 ஓட்டங்களை பெற்றதோடு கடைசி நேரத்தில் மிலிந்த சிறிவர்தன 29 பந்துகளில் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினார். இதன்மூலம் தம்புள்ளை அணி 40 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய கொழும்பு அணி 31 ஓட்டங்களை பெறுவதற்குள்ளேயே ஆரம்ப விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆரம்ப வீரராக வந்த டில்ருவன் பெரேரா 8 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆன நிலையில் மறுமுனையில் செஹான் ஜயசூரியவினால் 11 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.
எனினும் முதல் வரிசையில் வந்த லஹிரு திரிமான்ன தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சவாலான வெற்றி இலக்கை பொறுமையோடு துரத்திச் சென்ற அவர் மறுமுனை விக்கெட்டுகள் ஆட்டம் கண்டபோதும் கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றிவரை அழைத்துச் சென்றார்.
இதன்போது திரிமான்ன 3ஆவது விக்கெட்டுக்கு தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்து 69 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் கடைசி நேரத்தில் அணித்தலைவர் திரிமான்ன 15 பந்துகளில் பெற்ற 32 ஓட்டங்களும் அவ்வணி வெற்றியை நெருங்க உதவியது.
இந்நிலையில் போட்டி கடைசி 6 பந்துகளுக்கு 9 ஓட்டங்களை பெற வேண்டிய பரபரப்பான சூழலில் இருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் போட்டி முடிவுக்கு வந்தது. எனினும் கொழும்பு அணி ஆறு விக்கெட்டுகளை தக்க வைத்துக் கொண்ட நிலையில் அந்த அணியால் டக்வர்த் லுவிஸ் முறையில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற முடிந்தது.
இதன்போது அபாரமாக துடுப்பெடுத்தாடிய திரிமான்ன 99 பந்துகளில் 10 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அவர் A நிலை போட்டிகளில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது ஆறாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
திரிமான்ன, அண்மையில் நடத்த கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடரில் 6 பேட்டிகளிலும் ஒரு அரைச்சதத்துடன் 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலி எதிர் கண்டி
நிரோஷன் திக்வெல்ல மற்றும் மஹேல உடவத்தவின் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சதத்தின் உதவியோடு காலி அணிக்கு எதிரான போட்டியில் கண்டி டக்வர்த் லுவிஸ் முறையில் 28 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மழை காரணமாக 36 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டி போதிய வெளிச்சமின்மையால் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.
இலங்கை அணியை வெல்ல திட்டம் தீட்டுகிறார் ஜேசன் ஹோல்டர்
வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்
கொழும்பு, பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கண்டி அணி காலியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி ஓட்டம் பெறுவதற்கு முன்னரே அணித்தலைவர் உபுல் தரங்கவின் விக்கெட்டை பறிகொடுத்தது. வலது கை வேகப்பந்த வீச்சாளர் கசுன் ராஜித்த போட்டியின் இரண்டாவது பந்திலேயே தரங்கவை பூஜ்யத்திற்கு வெளியேற்றினார்.
ஆரம்ப வரிசை சொற்ப ஓட்டங்களுக்கு பறிபோனபோதும் 5ஆவது விக்கெட்டுக்கு ரொஷேன் சில்வா மற்றும் ஷம்மு அஷான் ஜோடி 106 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று காலி அணி வலுவான ஓட்டங்களை பெற உதவினர். இதில் ரொஷேன் சில்வா 59 பந்துகளில் 55 ஓட்டங்களையும் இளம் வீரர் ஷம்மு அஷான் 73 பந்துகளில் 72 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்மூலம் காலி அணி 35.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றது. சிறப்பாக பந்து வீசிய இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதான 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கசுன் ராஜித்த 3 விக்கெட்டுகளை பாதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய கண்டி அணிக்கு ஆரம்ப வீரர்கள் நிரோஷன் திக்வெல்ல மற்றும் மஹேல உடவத்த வலுவான ஆரம்பத்தை கொடுத்தனர். இருவரும் இணைந்து 137 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது அந்த அணி வெற்றி இலக்கை எட்டுவதற்கு இலகுவானது.
திக்வெல்ல 58 பந்துகளில் 75 ஓட்டங்களை பெற்றதோடு சிறப்பாக ஆடிய உடவத்த 96 பந்துகளில் 14 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 116 ஓட்டங்களை விளாசினார்.
இதன்மூலம் கண்டி அணி 30 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 217 ஓட்டங்களை பெற்றபோது போதிய வெளிச்சமின்மையால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது கண்டி அணி வெற்றி பெற 190 ஓட்டங்களை பெற்றிருந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததால் இலகு வெற்றி ஒன்றை பதிவு செய்தது.
இதன்போது இலங்கை ஒருநாள் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் 26 பந்துகளில் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடரின் அடுத்த போட்டிகள் இரண்டும் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க




















