ககிசோ றபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சியின் அதிரடி பந்துவீச்சின் மூலம் இலங்கையுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்காக பந்துவீச்சில் அசத்திய புஷ்பகுமார
தென்னாபிரிக்க வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி…
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இன்று (29) நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 36 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஆகியோர் அபாரமாக ஆடி அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். எனினும், இலங்கை அணியால் தென்னாபிரிக்காவுக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இலங்கை ஒருநாள் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பினார். கடந்த ஜனவரி மாதம் இலங்கை ஒருநாள் அணிக்கு மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டது தொடக்கம் ஒரே ஒரு போட்டியில் அணியை வழிநடத்திய நிலையில் இரண்டு வாரத்திற்குள் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய மெதிவ்ஸ் ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்புவது இது முதல் முறையாக இருந்தது.
எனினும், இலங்கை அணி கடந்த ஆறு மாதங்களில் ஆடும் முதல் ஒருநாள் போட்டியாக இது அமைந்தது. இதில் மெதிவ்ஸ் இலங்கை அணித்தலைவராக தனது 100 ஆவது போட்டியிலேயே இன்று களமிறங்கினார். இதன்படி இலங்கை ஒருநாள் அணிக்கு 100 போட்டிகளில் தலைமை வகிக்கும் நான்காவது வீரராக அவர் பதிவாகினார். இதற்கு முன்னர் அர்ஜுன ரணதுங்க (193), சனத் ஜயசூரிய (118) மற்றும் மஹேல ஜயவர்தன (117) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
தனுஷ்க குணதிலக்கவிற்கு ஆறு போட்டிகளில் விளையாடத் தடை
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகள் மற்றும் ஒப்பந்த பொறுப்புக்களை மீறிய …
அதேபோன்று இந்த போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் துடுப்பாட்ட சகலதுறை வீரராக செஹான் ஜயசூரிய இடம்பெற்றார். அவர் கடைசியாக 2016, நவம்பர் 23 ஆம் திகதி நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்காக ஆடினார். எனினும், கடந்த காலங்களில் இலங்கை கழகமட்ட போட்டிகளில் அவர் தொடர்ந்து சோபித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ககிசோ றபாடா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. மிட்விக்கெட் திசையில் பந்தை தட்டிவிட முயன்ற நிரோஷன் திக்வெல்ல 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அடுத்து வந்த குசல் மெண்டிஸும் றபாடா வீசிய அடுத்த ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரால் மூன்று ஓட்டங்களையே பெற முடிந்ததது. இந்நிலையில் மறுமுனை ஆரம்ப வீரர உபுல் தரங்க 10 ஓட்டங்களுடன் அனாவசியமாக ரன் அவுடாக இலங்கை அணி 22 ஓட்டங்களுக்கே மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
தொடர்ந்து வந்த அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் வெளியே செல்லும் பந்துக்கு தேவையின்று துடுப்பை செலுத்த அது முதல் ஸ்லிப் திசையில் இருந்த ஹாசிம் அம்லாவிடம் பிடியெடுப்பாக மாறியது. மெதிவ்ஸினால் 5 ஓட்டங்களையே பெற முடிந்தது.
தமிமின் சதத்தினால் ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணிக்கு
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் …
இந்நிலையில் செஹான் ஜயசூரிய அடுத்த ஓவரிலேயே வந்த வேகத்தில் ஓட்டமின்றி றபாடாவின் பந்துக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க இலங்கை அணி 36 ஓட்டங்களுக்கே முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு முதல் ஐந்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வரிசையில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.
எனினும், 6 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை தந்தனர். விக்கெட்டுகள் சரிந்திருந்தபோதும் இந்த இருவரும் தமது பாணியில் வேகமாக ஓட்டங்களை சேர்த்தனர். இதன்மூலம் இருவரும் இணைந்து 92 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இந்த ஓட்டங்களை பெறுவதற்கு இருவரும் 55 பந்துகளுக்கே முகம்கொடுத்தனர்.
இந்நிலையில் 30 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 49 ஓட்டங்களை பெற்றிருந்த திசர பெரேரா ஆட்டமிழந்தார்.
எனினும் மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் பெரேரா இலங்கை அணியை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு கடுமையாக போராடினார். ஆனால் 7 ஆவது விக்கெட்டாக அகில தனஞ்சய 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி மேலும் சிக்கலை சந்தித்தது.
ஒருமுனையில் அபாரமாக ஆடிய குசல் பெரேரா தனது வேகமான துடுப்பாட்டத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டார். அவர் ஜே.பி. டுமினி வீசிய 23 ஆவது ஓவரில் அதிரடி சிக்ஸர் ஒன்றையும் விளாசினார். சிறப்பாக ஆடி வந்த அவர் தப்ரைஸ் ஷம்சி வீசிய பந்துக்கு ரிவர்ஸ் ஸ்வீப் முறையில் அடிக்க முயன்று டேவிட் மில்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிந்தார்.
72 பந்துகளுக்கு முகம்கொடுத்த குசல் பெரேரா 11 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 81 ஓட்டங்களை பெற்றார். குசல் பெரேராவின் விக்கெட் வீழ்த்தப்பட்ட பின் இலங்கை அணியின் நம்பிக்கை சிதறியது. இந்நிலையில் கடைசி இரண்டு விக்கெட்டுகளும் அடுத்தடுத்து பறிபோக இலங்கை அணி 34.3 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
தென்னாபிரிக்க அணி சார்பில் மிரட்டும் பந்துவீச்சை வெளிக்காட்டிய வேகப்பந்து வீச்சாளர் ககிசோ றபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தனது நான்காவது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று இடதுகை சுழல் வீரர் ஷம்சியும் நான்கு விக்கெட்டுகளை பதம்பார்த்து தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.
பின்ன் இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் முதல் இரு விக்கெட்டுகளையும் அடுத்தடுத்த பந்துகளில் அகில தனஞ்சய வீழ்த்தி நம்பிக்கை தந்தார். இலங்கைக்காக ஆரம்ப ஓவரை வீசிய தனஞ்சய தனது 5ஆவது ஓவரின் 3 ஆவது பந்தில் ஹசிம் அம்லாவை 19 ஓட்டங்களுடன் போல்ட் செய்ததோடு அடுத்த பந்திலேயே எய்டன் மர்க்ராமை ஓட்டமின்றி வெளியேற்றினார்.
>>புகைப்படங்களைப் பார்வையிட <<
எனினும், மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த குயின்டன் டி கொக் மற்றும் அணித்தலைவர் பாப் டூ பிளசிஸ் 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். இந்நிலையில் இருவரும் தலா 47 ஓட்டங்களை பெற்று 3 ஓவர்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தபோதும் தென்னாபிரிக்க அணிக்கு அது சவாலாக இருக்கவில்லை.
மத்திய வரிசையில் ஜே.பி. டுமினி அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றார். இதன்மூலம் தென்னாபிரிக்க அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. டுமினி ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை சார்பில் தனஞ்சய ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணியின் விக்கெட்டுகளை சாய்த்து தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதி செய்த ஷம்சிக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஓகஸ்ட் முதலாம் திகதி தம்புள்ளையில் பகலிரவு ஆட்டமான நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















