செத்மிக்கவின் அபார பந்துவீச்சில் இலங்கை இளையோருக்கு முதல் வெற்றி

ACC men’s U19 Asia Cup 2025

5
ACC men’s U19 Asia Cup 2025 Sri Lanka vs Nepal
ACC men’s U19 Asia Cup 2025 Sri Lanka vs Nepal

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் B குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் நேபாளத்தை 8 விக்கெட்டுகளால் இலகுவாக வீழ்த்தியது.

கண்டி திரித்துவ கல்லூரியின் வேகப் பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் இன்று (13) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாள 19 வயதுக்குட்பட்ட அணி 25.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சிப்ரின் ஷ்ரேஸ்தா (18), சஹில் பட்டேல் (12), நிராஜ் குமார் யாதவ் (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் செத்மிக்க செனவிரட்ன 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரசித் நிம்சர, விக்னேஸ்வரன் ஆகாஷ், துல்னித் சிகேரா மற்றும் சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

83 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

திமன்த மஹாவித்தான 39 ஓட்டங்களுடனும், கவிஜ கமகே 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். விரான் சமுதித்த 10 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் ஆட்டநாயகனாக செத்மிக்க செனவிரட்ன தெரிவானார்.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி, தமது 2ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்வரும் திங்கட்கிழமை (15) எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

 

நேபாள 19 வயதுக்குட்பட்ட அணி – 82/10 (28.5) சிப்ரின் ஷ்ரேஸ்தா 18, செத்மிக்க செனவிரட்ன 5/25

 

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி84/2 (14.5) திமன்த மஹாவித்தான 39*, கவிஜ கமகே 24*

 

முடிவுஇலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<