பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த இளம் இலங்கை அணி

354
©AFP

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20  தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என வைட்வொஷ் செய்து கைப்பற்றியது. இதன்படி, முதல் முறையாக 3-0 என்ற T20 வைட்வொஷ் வெற்றியினையும் இலங்கை அணி இன்று பதிவுசெய்தது.

லாஹூரில் நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணியில் 5 மாற்றங்களும், பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நான் எப்போதும் விக்கெட்டிற்கு நேராகவே பந்துவீசுவேன் – வனிந்து ஹசரங்க

பாகிஸ்தான் அணிக்கெதிராக தற்போது நடைபெற்று வருகின்ற….

இலங்கை அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, ஷெஹான் ஜயசூரிய, மினோத் பானுக, நுவன் பிரதீப் மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு பதிலாக சதீர சமரவிக்ரம, ஓஷத பெர்னாண்டோ, அஞ்செலோ பெரேரா, லஹிரு மதுசங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் இணைக்கப்பட்டனர்.

அதேநேரம், பாகிஸ்தான் அணியில் உமர் அக்மல், மொஹமட் ஹஸ்னைன் மற்றும் அஹமட் சேஷாட் ஆகியோருக்கு பதிலாக ஹரிஸ் சொஹைல், இப்திகார் அஹமட் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் இணைக்கப்பட்னர்.

இலங்கை அணி

தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, ஓஷத பெர்னாண்டோ, அஞ்செலோ பெரேரா, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக (அணித் தலைவர்), வனிந்து ஹசரங்க, லக்ஷான் சந்தகன், லஹிரு மதுசங்க, கசுன் ராஜித, லஹிரு குமார

பாகிஸ்தான் அணி

பக்ஹர் ஷமான், பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல், இப்திகார் அஹமட், அசிப் அலி, சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாட் வசீம், சதாப் கான், மொஹட் அமீர், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ்

இவ்வாறான மாற்றங்களுக்கு மத்தியில் களமிறங்கிய இலங்கை அணி கடந்த இரண்டு போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த போதும், இந்தப் போட்டியில் தடுமாறியிருந்தது. குறிப்பாக ஓஷத பெர்னாண்டோ மாத்திரம் நிலையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அறிமுக T20  போட்டியில் விளையாடிய ஓஷத பெர்னாண்டோ இறுதிவரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்களை பெற்றார்.  இதன்படி, அறிமுக T20 போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற இலங்கை வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அஞ்செலோ பெரேரா 13 ஓட்டங்களை பெற, தசுன் ஷானக குறைந்த ஓட்ட வேகத்துடன் ஆடி, 25 பந்துகளில் 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். 

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் அமீர் 3 விக்கெட்டுகளையும், இமாட் வசீம் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி பாபர் அஸாம் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோரின் இணைப்பாட்டத்துடன் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்த போதும், இலங்கை அணியின் அபார பந்துவீச்சினால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

முதல் பந்திலேயே கசுன் ராஜித பக்ஹர் சமானின் விக்கெட்டினை வீழ்த்திய போதும், பாபர் அஸாம் மற்றும் ஹரிஸ் சொஹைல் சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியை கொடுத்தனர். ஆனாலும், வனிந்து ஹசரங்க, கசுன் ராஜித உட்பட இலங்கை பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியை இறுதிநேரத்தில் நெருக்கடிக்கு உள்ளாக்கி வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். 

பாகிஸ்தான் அணியின் சார்பாக 27 ஓட்டங்களுடன் பாபர் அஸாம் ஆட்டமிழக்க, தொடர்ந்து 52 ஓட்டங்களை பெற்றிருந்த ஹரிஸ் சொஹைல் ஆட்டமிழந்தார்.  இவர்களை அடுத்து களமிறங்கிய இமாட் வசீம், அசிப் அலி, அணித் தலைவர் சர்பராஸ் அஹமட் உட்பட பாகிஸ்தான் அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளிக்க பாகிஸ்தான் அணி 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய தொடரில் வய்ப்பை இழக்கும் இலங்கையின் முன்னணி வீரர்கள்!

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை….

இலங்கை அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்த, லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இதன்படி, இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை அவர்களுடைய சொந்த மண்ணில் குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி சாதனை படைத்ததுடன், சர்வதேச T20 கிரிக்கெட்டில் தங்களுடைய முதல் 3-0 என்ற வைட்வொஷ் வெற்றியினையும் பதிவுசெய்துள்ளது.

ஸ்கோர் விபரம்

முடிவு – இலங்கை 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<