மோசமான துடுப்பாட்ட பிரகாசிப்பிலிருந்து மீளுமா இலங்கை?

Sri Lanka tour of England 2021

288
GettyImages

சர்வதேச கிரிக்கெட்டுக்கு செல்லும் ஒவ்வொரு வீரரும், அதற்கான பயிற்சிகளையும், கடின உழைப்பையும், திறமையையும் கைவசம் வைத்துக்கொண்டுதான் செல்கின்றனர்.  

ஒரு நாட்டின் தேசிய அணிக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்வதென்பது சுலபமான விடயம் அல்ல. பல்வேறு சவால்கள், போட்டிகளை கடந்துதான் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைவதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. 

காஷ்மீர் பிரீமியர் லீக்கில் விளையாட டில்ஷானுக்கு அழைப்பு

அப்படி இருக்கையில், சர்வதேச கிரிக்கெட்டுக்குள் இடத்தை பிடித்த பின்னர், தங்களுடைய திறமையை சரியாக வெளிக்காட்ட முடியவில்லை என்றால், அது கேள்விக்குறிய விடயமாக மாறிவிடுகிறது. அந்த வகையில், தற்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இன்றளவில் பேசுபொருளாக மாறியிருக்கும் விடயம் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம்.  

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது, T20i தொடரில் மிகவும் மோசமான முறையில் விளையாடி, தொடரை 0-3 என இழந்திருந்தது.

Getty Images

இந்த தோல்விக்கு பல காரணங்கள் பதிலாக கூறப்பட்டன. அனுபவ வீரர்களின் குறைபாடு, வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்த சிக்கல், இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் குறைவு என்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், இலங்கை அணி அடிப்படையிலேயே தவறுகளை செய்து வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் T20i போட்டியில் 129 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி, அடுத்த இரண்டு T20i போட்டிகளிலும் முறையே 111 மற்றும்  91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இங்கிலாந்து ஆடுகளங்களை பொருத்தவரை, இவ்வாறான ஓட்ட எண்ணிக்கைகள், சராசரி ஓட்ட எண்ணிக்கைக்கு நிகரானதாக இல்லை என்பது மிகவும் கவலைக்குறிய விடயமாகும். 

இங்கிலாந்து ஆடுகளங்களில் இலங்கை வீரர்கள் ஓட்டங்களை குவிக்க முற்பட்ட விதம் மிகவும் வேடிக்கையாக அமைந்திருந்தது. இங்கிலாந்து அணியின் அசுர வேகப் பந்துவீச்சாளர் மார்க் வூட்டின் பந்துகளை எதிர்கொள்வதில் இலங்கை அணி தடுமாறிய விதம், அணியின் துடுப்பாட்ட பலவீனத்தை ஆரம்பத்திலேயே தெளிவாக காட்டியது.

Getty Images

அதிக வேகத்துக்கு தடுமாறியது மாத்திரமின்றி, ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வதிலும் இலங்கை அணிக்கு சிக்கல். இங்கிலாந்து அணியிடம் சிறந்த வேகம் மற்றும் சிறந்த ஸ்விங் பந்துகளை வீசும் வீரர்கள் இருப்பதை அறிந்தும், அதற்கு தயாராகவில்லையா? அல்லது தாயர்படுத்திய திட்டங்களை சரியாக செயற்படுத்தவில்லையா என்பது தெரியவில்லை.

இவ்வாறு வேகத்துக்கும், ஸ்விங்கிற்கும் தடுமாறியது மாத்திரமின்றி, சுழல் பந்துவீச்சுக்கு துடுப்பெடுத்தாட தடுமாறும் அளவிற்கு இலங்கை அணியின் நிலை மாறியுள்ளமை துரதிஷ்டவசமானதாகும். இலங்கையில் நடைபெறும் அதிகமான உள்ளூர் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் சுழல் பந்துவீச்சாளர்களை மாத்திரமே எதிர்கொள்கின்றனர். அவ்வாறு இருந்தும், சுழல் பந்துக்கு ஓட்டங்களை குவிப்பதிலும் இலங்கை அணி தடுமாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக T20i தொடரில், முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறிய விதமே, அணிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய வீரர்கள் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே பறிகொடுத்ததால், தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு அவர்களுடைய பணியை செய்யமுடியவில்லை. 

எனவே, அணியின் ஓட்ட எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, அவர்கள் நிதானமாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்தனர். முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொடுக்கும் பட்சத்திலேயே, பின்வரிசையில் வரும் துடுப்பாட்ட வீரர்கள் அவர்களுடைய இயற்கையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க முடியும். அதுதான் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பணி. எனினும், முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் ஏமாற்றத்தின் காரணமாக, அவர்களின் பணியையும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் செய்யவேண்டி நேரிட்டது. 

Getty Images

இங்கிலாந்து அணிக்கு எதிரான T20i தொடரில் இலங்கை அணி சார்பாக தசுன் ஷானக மாத்திரம் ஒரு அரைச்சதத்தை கடந்திருந்த நிலையில், ஏனைய எந்த வீரரும் 20 ஓட்டங்கள் என்ற சராசரியையும் எட்டவில்லை. அதுமாத்திரமின்றி, வேகமாக ஓட்டங்களை குவிக்க முடியாததும், ஓட்ட வேகத்தின் மந்தமான தன்மையும் தற்போது சர்வதேசத்தில் விளையாடப்படும் T20i கிரிக்கெட்டுடன் ஒப்பிடும் போது, இலங்கை அணியின் T20i கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோர் விளையாடிய காலப்பகுதியில், இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் எந்தவித குறைகளும் இருக்கவில்லை. நேர்மறையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்கள் போட்டியின் தன்மைக்கு ஏற்ப துடுப்பாட்டத்தை நகர்த்தினர். இதன் பிரதிபலனாகவே, 2014ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொள்ளும் வாய்ப்பு எமக்கு கிடைத்திருந்தது. 

எனினும், 2014ம் ஆண்டு T20i உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட அணியால், தற்போதைய காலத்துக்கு ஏற்றவகையில் T20i போட்டிகளில் விளையாட முடியாமை ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இலங்கையில் துடுப்பாட்ட வீரர்கள் கையாளும் துடுப்பாட்டத்துக்கும், இங்கிலாந்து போன்ற வேகமான ஆடுகளங்களை கொண்ட மைதானங்களில் துடுப்பெடுத்தாடுவதிலும் சில முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன.

இலங்கை ஆடுகளங்களில் பந்து ஸ்விங் ஆகுவது குறைவு, பௌன்ஸ் ஆகுவதும் குறைவு. எனவே, துடுப்பாட்ட வீரர்கள் பந்தினை பந்துவீச்சாளர்களுக்கு எதிரே உள்ள V என்ற பகுதியில் இலகுவாக ஓட்டங்களை குவிக்க மடியும். இலங்கையில் வைத்து இதனை சிறப்பாக செய்யும் துடுப்பாட்ட வீரர்கள், இங்கிலாந்து மண்ணிலும் அதேபோன்ற துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியமை, இவ்வாறான மோசமான துடுப்பாட்ட வெளிப்படுத்தலுக்கு முக்கிய காரணம்.

Getty Images

வேகம், பௌன்ஸ் மற்றும் ஸ்விங் அதிகமாக உள்ள ஆடுகளங்களில் V பகுதியில் ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்தமையினாலேயே ஓட்டங்கள் பெறப்படவில்லை  என்பதுடன், விக்கெட்டுகளும் பறிகொடுக்கப்பட்டன. எனவே, பந்துகளை துடுப்பாட்ட வீரர்கள் சரியாக அவதானித்து, ஓஃப் திசையில் ஓட்டங்களை பெற்றிருக்கவேண்டும். எனினும், ஓசத பெர்னாண்டோ உள்ளிட்ட இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் ஓஃப் திசையில் வரும் பந்துகளை லெக் திசையில் அடிக்க முற்பட்டனர். 

இதன் விளைவாகவே இலங்கை அணி வீரர்களால், ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. அதனுடன், ஓட்டமற்ற பந்துகளின் எண்ணிக்கையை அதிகமாகியது. குறிப்பாக, முதல் T20i போட்டியில் 47 ஓட்டமற்ற பந்துகள், 2வது T20i போட்டியில் 52 பந்துகள் மற்றும் மூன்றாவது T20i போட்டியில் 74 பந்துகள் என ஓட்டமற்ற பந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தன.  

எனவே, அணியால் போட்டிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பந்துகளை ஓட்டமற்ற பந்துகளாக துடுப்பெடுத்தாடும் போது, அணிக்கு அழுத்தம் அதிகரிப்பதுடன், ஓட்டங்களை சரியான முறையில் பெற்றுக்கொள்ள முடியாது. 

அத்துடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான T20i தொடரில் முழுமையான அழுத்தத்துடன், விளையாடியமை இலங்கை அணியின் துடுப்பாட்ட சறுக்கலுக்கு மற்றுமொரு காரணமாகும். துடுப்பாட்ட வீரர்களின் அழுத்தத்தை முதல் T20i போட்டியிலிருந்து காணமுடிந்தது. 

எனவே, இந்த அழுத்தத்தை சரியாக கையாண்டு இலங்கை அணி துடுப்பாட்டத்தில் வளர்ச்சியடையவேண்டும். இலங்கை அணியின் துடுப்பாட்டம் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக இலங்கை மற்றும் இங்கிலாந்து தொடர்களில் போட்டி வர்னணையாளராக இருந்த குமார் சங்கக்கார பல்வேறு யோசனைகளையும் கூறியிருந்தார்.

அந்தவகையில், துடுப்பாட்ட வீரர்கள் T20i போட்டிகளில் ஓட்டமற்ற பந்துகளை ஆடுவதை குறைக்க வேண்டும். ஒரு பந்தில் ஒரு ஓட்டத்தை கட்டாயமாக பெறவேண்டும். அதேநேரம், T20i போட்டிகளில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பௌண்டரியை எதிர்பார்க்கவேண்டும். பௌண்டரி இல்லையென்றால் குறித்த பந்துக்கு ஒரு ஓட்டத்தை பெறவேண்டும் என குமார் சங்கக்கார வர்னணையில் கூறியிருந்தார்.

எனவே, இங்கிலாந்து தொடரில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, அடுத்துவரும் இந்திய அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் வீரர்கள் தங்களுடைய துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்த வேண்டும். 

குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான T20i தொடரில் இலங்கை அணிக்கு முன்னேற்றங்கள் இல்லை என கூறமுடியாது. பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என்பன சர்வதேச தரத்துக்கு வளர்ச்சியடைவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. எனினும், துடுப்பாட்டம் என்ற பக்கம் பார்க்கும் போது, இலங்கை அணி முற்றுமுழுதாக வீழ்ச்சியை நோக்கியுள்ளது. இதில், மாத்திரம் இலங்கை அணி முன்னேறும் பட்சத்தில் மீண்டும் ஒரு சிறந்த T20i அணியென்ற பெயரை இலங்கை அணியால் வாங்கமுடியும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…