இலங்கை ஒருநாள் குழாமிலிருந்து மெதிவ்ஸ்,மெண்டிஸ் நீக்கம் : குழாம் அறிவிப்பு

2388

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை அணிக்குழாம் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட ஒருநாள் குழாமில் முன்னாள் ஒருநாள் மற்றும் T20 அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ஓட்டங்களை குவிக்கத் தவறிவந்த குசால் மெண்டிஸ்  ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். எனினும், இவர்கள் இருவரும் இன்று அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைப் பதவியை இழந்த மெதிவ்ஸின் அதிரடி அறிவிப்பு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மற்றும்..

தேர்வுக்குழு மற்றும் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அஞ்செலோ மெதிவ்ஸ்,  இவ்வார ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். அத்துடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவது தொடர்பில் சிந்திக்கவுள்ளதாகவும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னர் மெதிவ்ஸ் உடற்தகுதியின்மை காரணமாக ஒருநாள் குழாமில் இணைக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்திருந்தது.

இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட ஒருநாள் குழாத்திலிருந்து மெதிவ்ஸின் பெயர் தொடர்பில் குறிப்பிட்ட தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க, “மெதிவ்ஸின் உடற்தகுதி போதுமானமாக இல்லை. அவர் உடற்தகுதியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். களத்தடுப்பில் ஆகட்டும், துடுப்பாட்டத்தின் போது ஓட்டங்களை பெறுவதில் ஆகட்டும் மெதிவ்ஸின் உடற்தகுதி போதுமானதாக இல்லை. இதன் காரணமாகவே நாம் இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளோம். இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல” என குறிப்பிட்டார்.

அஞ்செலோ மெதிவ்ஸ் 2017ஆம் ஆண்டிலிருந்து 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 59.20 என்ற சராசரியில் 888 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க தொடரில் 5 போட்டிகளில் 78.33 என்ற சராசரியில் 235 ஓட்டங்களை பெற்றிருந்தார். இவரை தொடர்ந்து இறுதியாக விளையாடிய 21 இ்ன்னிங்ஸ்களில் ஒரு அரைச்சதத்தையும் பெறாத குசால் மெண்டிஸும் 15 பேர்கொண்ட குழாமில் இணைக்கப்படவில்லை.

மெண்டிஸ் மற்றும் மெதிவ்ஸ் ஆகியோரின் நீக்கத்துடன், ஆசிய கிண்ணக் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த டில்ருவான் பெரேரா, செஹான் ஜயசூரிய, சுரங்க லக்மால் மற்றும் உபாதைக்குள்ளாகியிருந்த தனுஷ்க குணதிலக ஆகியோருக்கும் இலங்கை ஒருநாள் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனடிப்படையில், தினேஷ் சந்திமால் தலைமை பொறுப்புடன் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளதுடன்,  இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகள், தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிரான போட்டிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர் ஒருநாள அணிக்கு திரும்பியுள்ளார். இவருடன் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷான் சந்தகன் ஆகியோரும் ஒரு நாள் அணியில் தமக்கான இடங்களை தக்கவைத்துள்ளனர்.

இதில், 15 பேர்கொண்ட குழாமில் பெயரிடப்படாத குசால் மெண்டிஸ், சுராங்க லக்மால், செஹான் மதுசங்க, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் தொடரின் மேலதிக வீரர்களுக்கான பெயர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்தும் இரண்டாவது…

இதேவேளை, இன்று அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாமில் பெரிய மாற்றங்கள் இல்லாவிடினும், உபாதைக்குள்ளாகிய தனுஷ்க குணதிலகவுக்கு பதிலாக கௌஷால் சில்வா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். எனினும், குணதிலகவின் உபாதை 3 வாரங்களுக்குள் குணமாகிவிட்டால் அவர் டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என தேர்வுக்குழு தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.

இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாமில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து தொடர் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் இறுதி தொடர் என்பதுடன், அவரின் இடத்துக்காக மலிந்த புஷ்பகுமார மீண்டும் டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் குழாம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), தனன்ஜய டி சில்வா, குசல் பெரேரா, உபுல் தரங்க, சதீர சமரவிக்ரம, நிரோஷன் டிக்வெல்ல, திசர பெரேரா, தசுன் சானக, அகில தனன்ஜய, அமில அபோன்சோ, லக்ஷான் சந்தகன், லசித் மாலிங்க, நுவான் பிரதீப், கசுன் ராஜித, துஷ்மந்த சமீர

டெஸ்ட் குழாம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குசால் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, ரொஷேன் சில்வா, ரங்கன ஹேரத், மலிந்த புஷ்பகுமார, டில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார (உடற்தகுதி), கசுன் ராஜித

இலங்கை எதிர் இங்கிலாந்து – போட்டி அட்டவணை

முதல் ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 10 – தம்புள்ளை (பகலிரவு)
இரண்டாவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 13 – தம்புள்ளை
மூன்றாவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 17 – பல்லேகலை (பகலிரவு)
நான்காவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 20 – பல்லேகலை
ஐந்தாவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 23 – ஆர்.பிரேமதாஸ (பகலிரவு)

ஒரு போட்டிக்கொண்ட T20 தொடர் – ஒக்டோபர் 27 – ஆர்.பிரேமதாஸ

முதல் டெஸ்ட் போட்டி – நவம்பர் 6-10 – காலி
இரண்டாவது டெஸ்ட் போட்டி – நவம்பர் 14-18 – கண்டி
மூன்றாவது டெஸ்ட் போட்டி – நவம்பர் 23-27 – எஸ்.எஸ்.சி