இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மூலம் அதன் உயர் செயற்திறன் நிலையத்தில் (High Performance Center) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாக அமைப்பு நேற்று (22) திறந்து வைக்கப்பட்டிருந்தது.
>>மகளிர் முத்தரப்பு தொடருக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தைக் கைப்பற்றிய ThePapare<<
புதிய நீச்சல் தடாக அமைப்பினை கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் அமைந்துள்ள உயர் செயற்திறன் நிலையத்தில் இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சர் திரு. சுனீல் குமார கமகே இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திரு. திலங்க சுமதிபாலவின் அழைப்பில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்திருந்தார்.
அத்துடன் திறப்பு விழாவில் இலங்கையின் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சுகத் திலகரட்ன, விளையாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. அனுராதா இல்லேபெரும மற்றும் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய மற்றும் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான சாமரி அத்தபத்து ஆகியோர் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய நீச்சல் தடாக அமைப்பானது நவீன வசதிகள் பல உள்ளடங்கலாக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு 25 மீட்டர் நீளம் மற்றும் 21 மீட்டர் அகலத்தினை உடையதாகவும் காணப்படுகின்றது.
அதேநேரம் இந்த நீச்சல் தடாகமானது தேசிய கிரிக்கெட் அணிகள், A – அணி மற்றும் தேசிய வேகப்பந்துவீச்சாளர் குழாம்கள் ஆகியவற்றுக்கு உபயோகம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சர்வதேச அணிகளுக்கும் பயன் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<