இலங்கை வந்துள்ள ஜப்பான் கிரிக்கெட் அணி

SLC assistance to development of Japan Cricket

11
Japan-Team

கிழக்கு ஆசிய பசுபிக் மற்றும் ஆசிய பிராந்திய 2026 T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிகாண் போட்டித் தொடருக்கு தயாராகும் நோக்கில் பயிற்சி முகாம் மற்றும் பயிற்சிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் கிரிக்கெட் அணி நேற்று முன்தினம் (31) இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

இதன்படி, ஜப்பான் கிரிக்கெட் அணி, 19 வயதுக்குட்பட்ட நான்கு மாகாண அணிகளுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், ஏழு T20I போட்டிகளைக் கொண்ட இந்தப் போட்டித் தொடரானது ஆகஸ்ட் 2 முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இவற்றில் ஐந்து போட்டிகள் மக்கொன சர்ரே கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டு போட்டிகள் கொழும்பு NCC கிரிக்கெட் மைதானத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஐசிசி இன் இணை உறுப்பு நாடுகளின் வளர்ச்சியை ஆதரிக்கும் இலங்கை கிரிக்கெட் சபையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஜப்பான் கிரிக்கெட் அணிக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க இலங்கை கிரிக்கெட் சபை வழங்க முன்வந்துள்ளது.

அத்துடன், போட்டி மத்தியஸ்தர்களையும், பதிவாளர்களையும் ஏற்பாடு செய்துகொடுக்கவும் போட்டிகளுக்கான பந்துகளை வழங்கவும், மைதான வசதிகளை ஏற்பாடு செய்யவும் இலங்கை கிரிக்கெட் சபை முன்வந்துள்ளது.

இதனிடையே, ஜப்பானின் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்புகள், பரிமாற்றங்கள், கிரிக்கெட் நிபுணத்துவம் ஆகியவற்றை வழங்குவதாக அளித்த உறுதிப்பாட்டுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த வருடம் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எதிர்வரும் அக்டோபரில் ஓமானில் நடைபெறும் 2026 T20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள இலங்கை சுற்றுப்பயணம் ஜப்பான் ணியை சிறப்பாகத் தயார்படுத்த   உதவும் என்று எதிர்;பார்க்கப்படுகிறது.

குவைத் மற்றும் நேபாளத்துடன் இணைந்து கிழக்கு ஆசிய பசுபிக் மற்றும் ஆசிய பிராந்திய இறுதிப் போட்டிக்கான குழு B இல் ஜப்பான் அணி இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தகுதி பெறும், அதில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2026 T20 உலகக் கிண்ணத்திற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும்;.

இதேவேளை, ஜப்பான் கிரிக்கெட் அணியானது T20I அணிகளுக்கான தரவரிசையில் உலக அளவில் 43வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<