மழையின் ஆதிக்கத்தோடு சமநிலையடைந்த 142ஆவது நீலங்களின் சமர்

401

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமியர் கல்லூரி அணிகள் இடையிலான, 142ஆவது நீலங்களின் சமர் (Battle of Blues) கிரிக்கெட் பெரும் போட்டி மழையின் ஆதிக்கத்துக்கு மத்தியில் சமநிலையில் நிறைவுற்றுள்ளது.

>>நீலங்களின் சமரில் பந்துவீச்சில் மிரட்டிய றோயல் கல்லூரி வீரர்கள்

அதேநேரம் போட்டி சமநிலை அடைந்ததனை அடுத்து, இப்போட்டிக்கான வெற்றிக்கிண்ணம் தொடர்ந்து புனித தோமியர் கல்லூரியின் வசம் காணப்படுகின்றது.

நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியின் முதல்நாள் ஆட்டம் சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் போட்டி இரண்டாவது நாளிலேயே ஆரம்பித்திருந்தது.

அதன்படி, போட்டியின் இரண்டாம் நாள் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்த புனித தோமியர் கல்லூரி அணி இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறைவுக்கு வந்திருந்த போது 87 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் காணப்பட்டிருந்தது.

அதன் பின்னர் இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையின் குறுக்கீட்டினால் சற்று தாமதித்து ஆரம்பித்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த தோமியர் கல்லூரி அணி இன்றைய நாளில் இரண்டு ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 89 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

>>இறுதிப் பந்து வெற்றியுடன் இளையோர் ஒருநாள் தொடர் முழுமையாக இலங்கை வசம்

தோமியர் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் பின்வரிசை வீரராக வந்திருந்த யசிரு ரொட்ரிகோ, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 30 ஓட்டங்களைப் பெற்றிருக்க, ஏனைய பின்வரிசை வீரரான மஹித் பெரேரா 22 ஓட்டங்களை எடுத்து தோமியர் கல்லூரி அணியில் வீரர் ஒருவர் பெற்ற இரண்டாவது கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்திருந்தார்.

றோயல் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் கிஷான் பாலசூரிய 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், சோனால் அமரசேகர 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கவிந்து பத்திரன 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸினை ஆரம்பித்த றோயல் கல்லூரி அணி சற்று அதிரடியான முறையில் துடுப்பாடி 21.5 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இடைநிறுத்தியது.

றோயல் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப வீரராக களமிறங்கியிருந்த இசிவர ஜயவர்தன 65 பந்துகளில் 3 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் பெற்றிருந்தார். மறுமுனையில், அஹான் விக்ரமசிங்க 26 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தோமியர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் யசிரு ரொட்ரிகோ 2 விக்கெட்டுக்களையும், நத்தன் கால்டெரா மற்றும் ரஜின்டோ திலகரட்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சுருட்டினர்.

பின்னர் 23 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய புனித தோமியர் கல்லூரி அணி, போட்டியின் மூன்றாம் நாளில் மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்படும்போது தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக ஒரு விக்கெட்டினைப் பறிகொடுத்து 32 ஓட்டங்களை எடுத்திருந்தது.

>>மழையினால் கைவிடப்பட்ட நீலங்களின் சமர் முதல்நாள் ஆட்டம்

தோமியர் கல்லூரியின் துடுப்பாட்டம் சார்பில் அணியின் தலைவர் சலின் டி மெல் 20 ஓட்டங்களுடனும், அனுக் பலிக விதான 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், றோயல் கல்லூரி அணிக்காக சோனல் அமரசேகர ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்தார்.

இதன் பின்னர் மழை நிலைமைகள் சீராகாத நிலையில் போட்டி நடுவர்களால் சமநிலை அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்


முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

<<மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>