ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

387
Image Courtesy - ICC

ரோஹித் சர்மாவின் அபார சதம், ஹர்திக் பாண்டியாவின் சகலதுறை ஆட்டம் என்பவற்றின் உதவியால் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி T20 தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 T20, 3 ஒரு நாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற, 2ஆவது T20 போட்டியை இங்கிலாந்து தம்வசமாக்கியது. இதனால், 1-1 என இப்போட்டித் தொடர் சமநிலை பெற்றதால். நேற்றைய 3ஆவதும், இறுதியுமான டி-20 விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

ஹேல்ஸின் அதிரடியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து

அலெக்ஸ் ஹேல்ஸின் அரைச் சததத்தின் உதவியுடன் இந்திய..

இரண்டாவது போட்டியில் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணி இந்தப் போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்து குல்தீப் யாதவுக்கு ஓய்வு வழங்கியிருந்தது. அவருக்குப் பதிலாக சென்னை சூப்பர் சிங்ஸ் வீரர் தீபக் சாஹர் T20 அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், 2ஆவது T20போட்டியில் புவனேஷ்வர் குமார் காயம் அடைந்ததால், அவருக்குப் பதிலாக சித்தார்த் கவுல் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அதேபோல, இங்கிலாந்து அணியில் ஜோய் ரூட்டுக்குப் பதிலாக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.

இவ்வாறான மாற்றங்களுடன், பிரிஸ்டலில் நேற்று (08) நடைபெற்ற இந்த தீர்க்கமான இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜேசன் ரோய், ஜோஸ் பட்லர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இங்கிலாந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள், பவர் ஃப்ளே ஓவர்கள் முடிவில் 73 ஓட்டங்களைக் குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவர்களில் 94 ஓட்டங்களைக் குவித்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது.

  • #Image Courtesy - ICC

34 ஓட்டங்களைக் குவித்திருந்த ஜோஸ் பட்லர், சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 9.1 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டி மிரட்டியது. இதனால், அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை 200ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  

இதில் 23 பந்துகளில் அரைச்சதம் அடித்து அசத்திய ஜேசன் ரோய், 67 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தீபக் சஹார் வீசிய பத்தாவது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் (30), மோர்கன் (06) பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.  

தொடர்ச்சியான சதங்களுடன் இலங்கை A அணிக்காக பிரகாசித்து வரும் திரிமான்ன

சுற்றுலா இலங்கை A அணி மற்றும் பங்களாதேஷ் A..

இந்த மூன்று வீரர்களினது விக்கெட்டுக்களையும் டோனிதான் பிடியெடுத்து வெளியேற்றினார். அத்துடன் சித்தார்த் கவுல் பந்தில் பிளங்கெட்டையும் (9) பிடியெடுத்து வெளியேற்றினார். மொத்தமாக இங்கிலாந்து இழந்த 9 விக்கெட்டில், 5 விக்கெட்டுக்களை பிடியெடுப்பு மூலமாகவும், ஒரு விக்கெட்டை ரன்அவுட் மூலமாகவும் இந்திய வீரர்கள் வீழ்த்தினார். இதன்மூலம் T20 போட்டியில் 5 பிடியெடுப்புக்களை எடுத்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை டோனி படைத்தார்.

அத்துடன், T20 போட்டியில் 50 பிடியெடுப்புகளை எடுத்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதன் மூலம் ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனை படைத்து டோனி அசத்தினார்.

இதனால், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களைக் குவித்தது.  

இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, T20 போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவுசெய்தார். அத்துடன், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுக்களையும், தீபக் சாஹர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதமும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

போட்டி தொடங்கிய 2ஆவது ஓவரில் ஷிகர் தவான் 5 ஓட்டங்களுடன் வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட இந்திய அணி 4ஆவது ஓவரிலேயே 50 ஓட்டங்களைக் கடந்தது. சிறிது நேரத்தில் ராகுல் 19 ஓட்டங்களுக்கு ஜேக் போல் பந்து வீச்சில் பிடியடுப்பை கொடுத்து வெளியேறினார்.

>> காணொளிகளைப் பார்வையிட   

அதனைத் தொடர்ந்து அணித் தலைவர் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மாவுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தடினர். குறிப்பாக ரோஹித் சர்மா இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சுக்கு தக்க பதிலடி கொடுத்து பந்தை சிக்ஸருக்கும், பௌண்டரிக்கும் விரட்டி அடித்தார்.

இந்நிலையில், 2 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் 43 ஓட்டங்களைக் குவித்த கோஹ்லி, கிறிஸ் ஜோர்டன் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, பாண்டியா களத்திற்குள் நுழைந்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டி வந்த ரோஹித் சர்மா 56 பந்துகளில் சதம் அடித்து இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

  • கோஹ்லி மற்றும் சர்மாவின் இணைப்பாட்டம் #Image Courtesy - ICC

இறுதியாக இந்திய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களைக் குவித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதன்மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு T20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்னதாக, அயர்லாந்துடன் 2-0 என்ற கணக்கிலும், இலங்கைபங்களாதேஷ் அணிகளுடனான முத்தரப்பு தொடரிலும், தென்னாபிரிக்காவுடன் 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடன் 3-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்துடன் 2-1 என்ற கணக்கிலும் T20 தொடர்களை வென்று அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்லா, டு ப்ளேசிஸ் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தோடு பயிற்சி போட்டி நிறைவு

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட்…

இது இவ்வாறிருக்க, இந்திய அணியின்ஹிட் மேன்என அழைக்கப்படுகின்ற ரோஹித் சர்மா 56 பந்துகளில் 100 ஓட்டங்களைக் (5 சிக்ஸர்கள், 11 பௌண்டரிகள்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். T20 போட்டியில் 3 சதங்கள் அடித்த 2ஆவது வீரர் எனும் பெருமையையும், முதல் இந்திய வீரர் எனும் சாதனையையும் ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் படைத்தார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் கொலின் முன்ரோ 3 சதங்களைப் குவித்திருந்தார்.

இதேநேரம், இப்போட்டியில் ரோஹித் சர்மா 14 ஓட்டங்களை எடுத்த போது, டி-20 போட்டியில் 2,000 ஓட்டங்களைக் குவித்த 2ஆவது இந்திய வீரராகவும், உலகின் 5ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றார். முன்னதாக விராட் கோஹ்லி இந்த சாதனையை முதலாவது T20 போட்டியில் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் ரோஹித் சர்மா பெற்றுக் கொண்டார்.

இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி, ஜேக் போல் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (12) நொட்டிங்ஹம்மில் நடைபெறவுள்ளது.

@ICC

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<