மெல்பர்னில் டிசம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் (Boxing Day Test) அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
T20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய குழாம் அறிவிப்பு
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் முதுகு உபாதை காரணமாக தவறவிட்டிருந்த கம்மின்ஸ், அடிலைட் நகரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மொத்தமாக 6 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார். அவுஸ்திரேலியா இந்த வெற்றியுடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரினையும் 3-0 என இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்க கைப்பற்றியிருந்தது.
விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையில் தனது உடல்நிலையினை கருத்திற் கொண்டு கம்மின்ஸ் அழுத்தம் குறைந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் சிட்னியில் நடைபெறவிருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் பூரண உடற்தகுதியுடன் அணிக்கு திரும்புவார் என நம்பப்படுகின்றது. கம்மின்ஸிற்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளரான ஸ்கொட் போலண்ட் அணியில் தொடர அதிக வாய்ப்புள்ளது.
இதேநேரம் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி சுழல்பந்துவீச்சாளரான நதன் லயனும், அடிலைட் டெஸ்டில் தசை உபாதைக்கு முகம் கொடுத்த நிலையில் அவரும் நான்காது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகின்றது.
எனினும் அடிலைட் டெஸ்ட் போட்டியினை உடல்நலக் குறைவினால் தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித் அணிக்கு தலைவராக திரும்ப எதிர்பார்க்கப்பட, ஜோஷ் இங்லீஸ் நான்காவது டெஸ்டில் அவரின் பிரதியீடாக ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















