சிரேஷ்ட வீரர்களின்றி இலங்கை வரும் பாகிஸ்தான் அணி

Pakistan tour of Sri Lanka 2026

2
Pakistan tour of Sri Lanka 2026

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (28) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாத்தில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் வீரர்கள் இடம்பெறவில்லை.

இதற்குக் காரணம் அவர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் T20 லீக்கில் பங்கேற்று வருகின்றனர். இதில் பாபர் அசாம் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கும், மொஹமட் ரிஸ்வான் ரெனிகேட்ஸ் அணிக்கும், ஷஹீன் அப்ரிடி பிரிஸ்பேன் ஹீட் அணிக்கும், ஹாரிஸ் ரவூப் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கும் விளையாடி வருகின்றனர்.

எனினும் அதே தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்கு விளையாடி வரும் சகலதுறை வீரர் சதாப் கானை இலங்கை சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் குழாத்துக்கு அந்நாட்டு தேர்வுக்குழு அழைத்துள்ளது.

அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்திற்கு அவருக்கு வாய்ப்பளிப்பது குறித்து பரிசீலிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சதாப் கான் இறுதியாக கடந்த ஜுன் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான T20I தொடரில் விளையாடியிருந்தார்.

இந்த நிலையில், சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் T20I குழாத்தில் இதுவரை சர்வதேச அரங்கில் விளையாடாத 23 வயது வலதுகை துடுப்பாட்ட வீரர் கவாஜா நஃபாய் முதல் தடவையாக பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை 32 முதல்தர T20I போட்டிகளில் 7 அரைச் சதங்களுடன் 688 ஓட்டங்கள் குவித்துள்ள அவர் 23.72 சராசரியும், 132.81 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார்.

ஜனவரி முதல் வார இறுதியில் இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் அணி 7, 9, 11 ஆகிய திகதிகளில் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக 3 T20I போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இலங்கை அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பாகிஸ்தான் T20I குழாம் விபரம்:

 

சல்மான் அலி ஆகா (தலைவர்), அப்துல் சமாத், அப்ரார் அஹ்மட், ஃபஹீம் அஷ்ரப், ஃபக்கார் ஜமான், கவாஜா நஃபாய், மொஹமட் நவாஸ், மொஹமட் சல்மான் மிர்சா, மொஹமட் வசீம், நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<