பொதுநலவாய குத்துச்சண்டை இலங்கை அணியில் கிளிநொச்சி வீரர்

Commonwealth Games 2022

106

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இலங்கை குத்துச்சண்டை அணியில் கிளிநொச்சியைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் முதல் தடவையாக இடம்பிடித்துள்ளார்.

இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை குத்துச்சண்டை அணியில் 8 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் 4 வீரர்களும், பெண்கள் பிரிவில் 4 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், அண்மைக்காலமாக தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற கிளிநொச்சி – தர்மபுரம், புன்னைநீராவி நாதன் குடியிருப்பை வதிவிடமாகக் கொண்ட விட்டாலிஸ் நிக்லஸ் முதல் தடவையாக இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.

பொதுநலவாய விளையாட்டு விழாவினை இலக்காகக் கொண்டு இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிளிபர்ட் கிண்ண குத்துச்சண்டைப் போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் கொழும்பில் நடைபெற்றது.

இலங்கையில் உள்ள முன்னணி குத்துச்சண்டை வீரர்கள் பங்குகொண்ட இப்போட்டித் தொடரில் ஆண்களுக்கான 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட நிக்லஸ் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

எனவே, நிக்லஸ் வெளிப்படுத்திய ஆற்றல் காரணமாக இம்முறை பேர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.

பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை குத்துச்சண்டை அணியில் இடம்பிடித்த முதலாவது வட மாகாண வீரராக அவர் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கு தகுதிபெற்றது தொடர்பில் விற்றாலிஸ் நிக்லஸ் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில்,

”பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்ற கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்தப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுகொடுப்பதே எனது இலட்சியம் ஆகும். அத்துடன் இன்னும் 2 ஆண்டுகளில் பரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை சுவீகரிக்கும் நோக்கத்துடன் கடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன்” என்றார்.

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியலாயத்தில் கல்வி பயின்ற நிக்லஸ், தனது சகோதரியின் உந்துதலால் பாடசாலைக் காலத்திலேயே குத்துச்சண்டை விளையாட்டை தேர்ந்தெடுத்துள்ளார்.

இதில் 2014இல் கனிஷ்ட தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் 69 கிலோ கிராம் எடைப் பிரிவில் முதல் தடவையாகக் களமிறங்கிய அவர், தன்னுடைய முதல் முயற்சியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வட மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது பதக்கமாக இது இடம்பிடித்தது.

அன்று முதல் பல்வேறு தேசிய மட்ட குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை ஈட்டிய நிக்லஸ், 2016இல் இலங்கை இராணுவ குத்துச்சண்டை அணியில் இணைந்து கொண்டார். குறிப்பாக தேசிய விளையாட்டு விழா, பாதுகாப்பு சேவைகள் குத்துச்சண்டைப் போட்டித் தொடர், கிளிபர்ட் கிண்ண குத்துச்சண்டைப் போட்டித் தொடர் என பல முன்னணி போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைக் குவித்தார்.

இதில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 64-69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தினை வென்ற அவர், 2017இல் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 69 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினையும், இறுதியாக 2018இல் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

இதனிடையே, நேபாளத்தில் 2019இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான உத்தேச இலங்கை குத்துச்சண்டை குழாத்தில் நிக்லஸ் இடம்பிடித்தாலும், பிரதான குழாத்தில் இடம்பெற முடியாமல் போனது.

ஆனால், கடந்த 2014 முதல் தேசிய மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வந்த நிக்லஸுக்கு முதல் தடவையாக இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் பங்குபற்றுவதற்கான அரிய வாய்ப்பொன்று கிடைத்துள்ளது.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற பொன்மொழிக்கு நிதர்சனமாக மாறி இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கும் முன்உதாரணமாக மாறியுள்ள 28 வயதான விட்டாலிஸ் நிக்லஸ், இம்முறை பேர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமையை தேடித் கொடுக்க வேண்டும் என இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளம் ThePapare.com சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிலையில், இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஆண்கள் குத்துச்சண்டை அணியின் பயிற்சியாளராக சமிந்த சம்பத் ஜயதிலகவும், பெண்கள் அணியின் பயிற்சியாளர்களாக அமில அரவிந்த திசேராவும் செயற்படவுள்ளனர்.

ஆண்கள் குத்துச்சண்டை அணி

இஷான் ரன்ஜீவ செனவிரட்ன, ருக்மால் பிரசன்ன, சன்ஜீவ பண்டார ராஜகருணா, விட்டாலிஸ் நிக்லஸ்

பெண்கள் குத்துச்சண்டை அணி

நதீகா புஷ்பகுமாரி, கேஷானி ஹன்சிகா கஸ்தூரி ஆரச்சி, ஜீவன்தி விமுக்தி குமார, சன்ஜீவனி ஸ்ரீமாலி குரே

 >> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<