தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்களாக துறைமுக அதிகாரசபை, விமானப் படை அணிகள் தெரிவு

Munchee Super League Volleyball Championship 2024

42
Munchee Super League Volleyball Championship 2024

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட மஞ்சி சுப்பர் லீக் தேசிய கரப்பந்தாட்டப் சம்பியன்ஷிப்பின் ஆடவர் பிரிவில் இலங்கை துறைமுக அதிகார சபை அணியும், மகளிர் பிரிவில் இலங்கை விமானப்படை அணியும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தன. 

இலங்கையின் முன்னணி 17 அணிகள் பங்குகொண்ட இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை வென்னப்புவ, சேர் அல்பர்ட் எப். பீரிஸ் உள்ளக அரங்கில் நடைபெற்றது 

இதில் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் இலங்கை மின்சார சபை அணியை எதிர்கொண்ட துறைமுக அதிகாரசபை அணி 3–0 என வெற்றியீட்டியது. 

இப்போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்திய துறைமுக அதிகாரசபை 25–19, 25–22 மற்றும் 25–21 என மூன்று செட்களையும் கைப்பற்றி சம்பியனாகத் தெரிவாகியது 

இறுதியாக 2018இல் நடைபெற்ற தேசிய கரப்பந்தாட்டப் சம்பியன்ஷிப் ஆடவர் பிரிவில் இலங்கை துறைமுக அதிகார சபை சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது 

இதனிடையே, மகளிர் பிரிவு இறுதிபோட்டியில் இலங்கை துறைமுக அதிகாரசபை அணியை எதிர்கொண்ட இலங்கை விமானப் படை அணி 3–1 என வெற்றி பெற்று ஏழாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது 

>>2024 இல் இலங்கையின் விளையாட்டுத்துறையில்  நடந்தவை!<<

இந்த நிலையில், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் மூன்றாவது இடத்தை இராணுவ அணிகள் பெற்றுக்கொண்டன. 

இம்முறை சம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு தலா ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது 

இதேவேளை, இம்முறை  தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சிறந்த வீரர் விருதை இலங்கை துறைமுக அதிகாரசபையின் லசிந்து மெத்மால் வசந்தபிரிய வென்றதோடு, மகளிர் பிரிவின் சிறந்த வீராங்கனையாக இலங்கை விமானப் படையின் சத்துரிக்கா கயனி ரணசிங்க தெரிவானார். 

பரிசளிப்பு விழாவில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரட்ன, சிலோன் பிஸ்கட் பிறைவெட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் கருணாரட்ன, மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் .எஸ் நாலக உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

>>மேலும்பலவிளையாட்டுசெய்திகளைப்படிக்க<<