பிக் பேஷ் லீக் வீரர்கள் வரைவுப் பட்டியலில் குசல் பெரேரா

24

புதிய பருவத்திற்கான (2025-26) பிக் பேஷ் லீக் (BBL) T20 தொடரின் வீரர்கள் வரைவில் (Players’ Draft) இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா இடம்பெற்றுள்ளார்.

>>அதிர்ச்சி அறிவிப்புடன் சர்வதேச போட்டிகளில் பூரன் ஓய்வு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (CA) ஒழுங்கு செய்து நடத்தும் BBL தொடரில் பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ள நிலையில், இந்த பட்டியலின் முதல் பகுதி இன்று (10) வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலிலே இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் பெரேராவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலமாக அண்மைக்காலமாக பல T20 லீக் தொடர்களில் பிரகாசித்து வரும் குசல் பெரேராவிற்கு மற்றுமொரு முன்னணி லீக் தொடரில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கின்றது.

மறுமுனையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான ஷஹீன் அப்ரிடி, மொஹம்மட் ரிஸ்வான், ஹரிஸ் ரவூப் மற்றும் ஷதாப் கான் ஆகியோரும் BBL வீரர் வரைவில் பெயர் இடம்பெற்ற ஏனைய முன்னணி வெளிநாட்டு வீரர்களாக மாறுகின்றனர்.

இதேவேளை T20 லீக் தொடர்களில் ஜொலித்து வருகின்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷமார் ஜோசப், நியூசிலாந்தின் லோக்கி பெர்குசன் மற்றும் டிம் சவ்தி ஆகியோரும் BBL வரைவில் உள்ளதோடு, இங்கிலாந்தின் சேம் கரன் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBL வீரர்கள் வரைவில் பெயர் இடம்பெற்ற வீரர்களினை தொடரில் பங்கெடுக்கும் அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஜூன் 19ஆம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வீரர்கள் வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள முழுப் பட்டியலானது, மிக விரைவில் Big Bash செயலி வாயிலாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<