உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

ICC World Test Championship Final

2
ICC World Test Championship Final

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2023-2025 பருவகாலத்துக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், 3ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள பாட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (13) அறிவித்திருந்தது.

இதனிடையே, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் முதன்முறையாக ஆடவுள்ள 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் தலைவராக டெம்பா பவுமா தொடர்கிறார். அதேசமயம், வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஆடியிருந்தார்.

அதேபோல, ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ககிசோ ரபாடா அணியில் இடம்பெறுவாரா சந்தேகம் எழுந்த நிலையில், அவரும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதுதவிர்த்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவுக்கும் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் டோனி டி ஸோர்ஸி, ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ், டேன் பீட்டர்சன் உள்ளிட்டோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். இவர்களுடன் எய்டன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேஷவ் மஹராஜ், வியான் முல்டர் மற்றும் கைல் வெர்ரைன் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும், இளம் வீரர்களான குவேனா மபாகா மற்றும் மெத்யூ பிரீட்ஸ்கி உள்ளிட்டோருக்கு தென்னாப்பிரிக்கா அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட 31 வயது இடதுகை சுழல்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 2019இல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி இதுவரை 4 டெஸ்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் நடப்பு சம்பியனாகக் களமிறங்கும் அவுஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியில் களமிறங்கவுள்ளது. மறுபுறத்தில், இதுவரை ஐசிசி தொடர்களில் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென்னாப்பிரிக்கா அணியானது, இம்முறை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் வெற்றியீட்டி வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியில் களமிறங்கவுள்ளது.

எனவே, பலமிக்க அவுஸ்;திரேலியா அணிக்கு எதிராக வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அணி வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற புதிய சரித்திரத்தை எழுதுமா? என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்கா அணி விபரம்: டெம்பா பவுமா (தலைவர்), டோனி டி ஸோர்ஸி, எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜன்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<