கில், ஷஹாவின் அதிரடி ஆட்டங்களுடன் குஜராத்துக்கு இலகு வெற்றி

139
Wriddhiman Saha

IPL தொடரில் இன்று (7) நடைபெற்ற லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மான் கில் மற்றும் விரிதிமன் ஷஹா ஆகியோரின் அதிரடி ஆட்டங்களுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி 56 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காக முதல் 10 போட்டிகளில் விளையாடாமல் இருந்த முன்னணி துடுப்பாட்ட வீரர் குயிண்டன் டி கொக் களமிறக்கப்பட்டிருந்தார்.

>> மதீஷ பத்திரனவின் எதிர்காலத் திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் – கருத்து வெளியிட்டடோனி

எதிரணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகிய சுப்மான் கில் மற்றும் விரிதிமன் ஷஹா ஆகியோர் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

ஆரம்பத்திலிருந்து வேகமாக ஆடிய விரிதிமன் ஷஹா அரைச்சதம் கடந்து 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் ஆரம்பத்தில் நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்த சுப்மான் கில் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இவர்களை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 25 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 21 ஓட்டங்களையும் வேகமாக பெற்றுக்கொள்ள 20 ஓவர்கள் நிறைவில் வெறும் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து குஜராத் அணி 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் மொஷின் கான் மற்றும் ஆவேஷ் கான் குறித்த இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்திருந்த பாரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோவ் சுபர் ஜயண்டஸ் அணிக்கு கெயல் மேயர்ஸ் மற்றும் குயிண்டன் டி கொக் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

கெயல் மேயர்ஸ் வேகமாக 32 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்த நிலையில், பின்னர் களமிறங்கிய மத்தியவரிசை வீரர்கள் ஏமாற்ற தொடங்கினர். தனியாளாக இறுதிவரை போராட்டம் காண்பித்த குயிண்டன் டி கொக் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர்கள் இருவரைத்தவிர்த்து ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி 171 ஓட்டங்களை பெற்று 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் சிறப்பாக பிரகாசித்த மொயீட் சர்மா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

அதேவேளை இந்தப் போட்டியுடன் தங்களுடைய 8வது வெற்றியை பதிவுசெய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி 11 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<