ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக இன்று (24) நடைபெறவுள்ள சுப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, பங்காளதேஷ் அணியின் தலைவர் லிட்டன் தாஸ் காயத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் (22) ஐசிசி அகடமி மைதானத்தில் நடைபெற்ற வலைப் பயிற்சியின்போது அவரது முதுகில் தசை இழுப்பு ஏற்பட்டுள்ளது. இதன்போது அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலைப் பயிற்சியின்போது ஸ்குவேர் கட் ஷொட் ஆடுவதற்கு முற்பட்ட போது, லிட்டன் தாஸின் இடது பக்க இடுப்பில் அசௌகரியம் ஏற்பட்டது. இதனையடுத்ர் அணியின் உடற்கூறு மருத்துவர் பெய்ஸிட் உல் இஸ்லாம் பரிசோதனை செய்த பின்னர், லிட்டன் பயிற்சியிலிருந்து விலகினார்.
- பங்களாதேஷூடன் சுப்பர் 4 முதல் போட்டியில் இலங்கைக்கு தோல்வி
- ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இலங்கை
- மீண்டும் துபாய் செல்லும் துனித் வெல்லாலகே
இந்த நிலையில், லிட்டன் தாஸின் காயம் தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “வெளியே இருந்து பார்க்கும்போது லிட்டன் தாஸ் நன்றாகத்தான் இருக்கிறார், ஆனால் இறுதி முடிவை எடுப்பதற்கு முன் ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனை அவசியம்,” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பின் லிட்டன் கடுமையான வலியில் இருப்பதாகத் தெரியவில்லை என்றாலும், ஒருவேளை இன்று நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு விளையாட முடியாமல் போனால் அது பங்காளதேஷ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும்.
மேலும், லிட்டன் தாஸுக்கு இன்றைய போட்டியில் விளையாடுவதற்கு முடியாமல் போனால் யார் அணிக்கு தலைமை தாங்குவார் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது, ஏனெனில், இந்த தொடருக்காக துணைத்தலைவர் யாரையும் பங்காளதேஷ் கிரிக்கெட் சபை நியமிக்கவில்லை.
இம்முறை ஆசியக் கிண்ணத்தில் சுப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கையை பங்களாதேஷ அணியும், பாகிஸ்தானை இந்தியாவும் வீழ்த்தியது. எனவே இன்று நடைபெறவுள்ள இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















