ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக உபாதை காரணமாக மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனானாயக்க ThePapare.com இடம் தெரிவித்தார்.
இலங்கை அணியில் இருந்து சந்திமால் நீக்கம், திக்வெல்ல இணைப்பு
நேற்று (12) டுபாயில், இலங்கை அணி பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, தனுஷ்க குணதிலகவின் முதுகுப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது அவர் முழுமையான தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம், இவருக்குப் பதிலாக சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார் எனவும் சரித் சேனானாயக்க ThePapare.com இடம் தெரிவித்தார்.
எனவே, செஹான் ஜயசூரிய இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணிக்கவுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கை அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்த தனுஷ்க குணதிலகவின் இழப்பு, இலங்கை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் சபையினால் விதிக்கப்பட்ட தடை காரணமாக தேசிய அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மட்டுப்படுத்தப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவில்லை.
இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் அணிகளுக்கிடையிலான SLC T-20 லீக் தொடரில் தனுஷ்க குணதிலக சிறப்பான சகலதுறை பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதன்போது அவர் 7 போட்டிகளில் 2 சதங்கள் உள்ளடங்கலாக 247 ஓட்டங்களை பெற்றதுடன், பந்து வீச்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இவ்வாறு சிறந்த திட நம்பிக்கையுடன் இருந்த தனுஷ்க குணதிலக தற்போது துரதிஷ்டவசமாக மீண்டும் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
ஆசிய கிண்ணத்தின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகும் அகில தனன்ஜய
அத்துடன், குழாத்தில் தனுஷ்க குணதிலகவின் இடத்தை பிடித்துள்ள செஹான் ஜயசூரியவும் SLC T-20 தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்த இவர், மீதமிருந்த மூன்று போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். பின்னர், SLC T20 லீக்கில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய இவர் 139 ஓட்டங்களை பெற்றதுடன், பந்து வீச்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு, சகலதுறை வீரரான இவருக்கு மீண்டும் தேர்வுக்குழு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இதேவேளை, ஆசிய கிண்ணத்துக்கான அணிக் குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த தினேஷ் சந்திமால் விரல் உபாதை காரணமாக வெளியேறியிருந்தார். இதனால் இவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல அணியில் இணைக்கப்பட்டார். இதேநிலையில், அகில தனன்ஜயவும் தனிப்பட்ட காரணத்திற்காக ஆசிய கிண்ணத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தின் ஆரம்ப மோதல்களில் முக்கிய வீரர்கள் இன்றி களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க






















