இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

334

இங்கிலர்நது மகளிர் அணிக்கு எதிராக அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6  விக்கெட்டுக்களால் தோல்வியடைந்த இலங்கை அணி, ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 8ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக இடம்பெற்றுவரும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இலங்கை மங்கைகளை வீழ்த்திய இங்கிலாந்து மகளிர்

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது…

இந்த நிலையில், இலங்கை மகளிர் அணிக்கும், இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (18) அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் முதலில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அட்டபத்து முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி, இங்கிலாந்து மகளிர் அணியின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு காரணமாக 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா மாதவி 42 ஓட்டங்களையும், ஹன்சிமா கருணாரத்ன மற்றும் சமரி அட்டபத்து ஆகியோர் தலா 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, ஏனையோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து மகளிர் அணியின் அலெக்ஸ் ஹார்ட்லி 3 விக்கெட்டுக்களையும், லோரா மார்ஷ் மற்றும் ஆன்யா ஷ்ரொப்சோல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி 33.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது. இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கிய எமி ஜோன்ஸ் அரைச்சதம் கடந்து 54 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்க்க, லோரன் வின்பீல்ட் 44 ஓட்டங்களையும், டாம்மி பூமுன்ட் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் இனோஷி பிரியதர்ஷனி 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இதன்படி, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றியது.

இலங்கை மகளிர் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிருக்கு அபார வெற்றி

இலங்கை மகளிர் வளர்ந்துவரும் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையில் கொழும்பு பி…

இலங்கை மகளிர் அணி ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக தங்களது 13 ஆவது தோல்வியை இன்று சந்தித்துள்ளது.

இதேவேளை இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

முடிவு இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க