மீண்டும் துபாய் செல்லும் துனித் வெல்லாலகே

Men's Asia Cup 2025

23
Dunith Wellalage

தந்தையின் திடீர் மறைவு காரணமாக நாட்டுக்கு வருகை தந்த இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரரான துனித் வெல்லாலகே இன்று (19) இரவு டுபாய் நோக்கிப் பயணமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி நாளை (20) பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ள நிலையில், அந்தப் போட்டிக்கு முன்னர் இலங்கை அணியுடன் இணைந்துகொள்ள அவர் இவ்வாறு தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் துபாய் நோக்கி பயணமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிடடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, துனித் வெல்லாலகேவுடன் இலங்கைக்கு வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மஹிந்த ஹலங்கொடவும் அவருடன் துபாய்க்கு பயணமாகவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்று (18) நடைபெற்ற இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியின் போது துனித் வெல்லாலகேவின் தந்தையான சுரங்க வெல்லாலகே (54 வயது) திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறிய அவர் அணியின் முகாமையாளரோடு இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்தார்.

துனித் வெல்லாலகேவின் தந்தையான சுரங்க வெல்லாலகே முன்னாள் பாடசாலை கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது தந்தை ரமேஷ் டெண்டுல்கரின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு 1999 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<