தற்போதைய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPL போட்டிகளுக்கு தகுதியானவர்கள் அல்ல : முரளிதரன்

5786

கிரிக்கெட் உலகில் சுழல் பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன், IPL போட்டிகளில் விளையாட கூடிய கிரிக்கெட் வீரர்கள் இலங்கையில் உள்ளனர் என நம்பிக்கை தெரிவித்த அதேவேளை அவர்கள் IPL போட்டிகளில் விளையாட மேலும் திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.

சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார

கடந்த IPL போட்டிகளை விட இம்முறை அதிகளவான இந்திய கிரிக்கெட் வீரர்களும் மற்றும் அயல் நாட்டு கிரிக்கெட் வீரர்களும் பணச் செழிப்பான இந்த லீக் போட்டிகளில் பங்குபற்றுவது கவனத்தை ஈர்த்துள்ள இன்றைய நிலையில்,

IPL போன்ற முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக் கூடிய அளவிலான கிரிக்கெட் வீரர்கள் இலங்கையில் இல்லை. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நல்ல அதிரடியான துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர். IPL தொடரில், 32 சர்வதேச வீரர்களை உள்ளடக்கலாம். எனினும், எமது வீரர்கள் இதற்கு உகந்தவர்கள் இல்லை” என்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் பந்து வீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் மேலும் பேசிய சுழல் பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன், அணிகளின் உரிமையாளர்கள் கடந்த காலங்களைப் போன்று இலங்கை அணி வீரர்களை பார்க்கவில்லை. உண்மையில் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எமது வீரர்கள் இல்லை. எங்களிடம் அதிரடியான வீரர்கள் பலர் இருந்தனர் எனினும் அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டனர்.

“எனினும், புதியவர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் தயாராகும் வரை IPL அவர்களை தெரிவு செய்யாது. ஏனெனில், அவர்களால் தங்களது அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களை மாத்திரமே இணைத்து கொள்ள முடியும். அத்துடன், நல்ல அனுபவம் உள்ள நிறைய வெளிநாட்டு வீரர்கள் இருக்கும் போது ஏன் அவர்கள் அனுபவமற்ற இலங்கை வீரர்களை தெரிவு செய்ய வேண்டும்?”

அதேநேரம் 45 வயதான முரளி, 1992ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான நாளிலிருந்து இன்றைய நாள் வரையிலான மாற்றங்கள் குறித்து பேசினார். டி20 போட்டிகள் கிரிக்கெட் மேம்பாடுகளில் முக்கிய பங்காற்றுகின்றன என்று தெரிவித்தார்.

“உலகிலுள்ள டி20 கிரிக்கெட் போட்டிகள் அதிகளவான இளம் வயது ரசிகர்களை கவருகின்றன. அது மிக முக்கியமானதாகும். ஏனெனில், அந்த காலத்தில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு வயதான ரசிகர்கள் அதிகளவில் இருந்தனர். ஆனால் இன்று, நிறைய இளம் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். 2007ஆம் ஆண்டு முதல் தடவையாக IPL ஆரம்பமானது. அத்துடன், இந்த போட்டிகளில் வழங்கப்படும் கொடுப்பனவுகள் கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள உதவி செய்கின்றன” என்று குறிப்பிட்டார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 3000 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ள முரளிதரன், கடந்த 10 வருடங்களில் நிறைய மாற்றங்களை கண்டுள்ள நிலையில் கடந்த காலத்துடன் ஒப்பீடு செய்வதற்கு மறுத்தார்.

“90ஆம் ஆண்டுகளில் விளையாடிய கிரிக்கெட்டுக்கும் இப்போதுள்ள கிரிக்கெட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஒருநாள் போட்டிகளில் 220 ஓட்டங்கள் எதிரணிகளுக்கு அந்த காலத்தில் கடினமான இலக்கு. எனினும், இன்று 350 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாலும் வெற்றியீட்டுவது சந்தேகமே. துடுப்பாட்ட வீரர்களின் மனநிலைகள் பாரிய மாற்றத்தை கண்டுள்ளது. அதனால் கடந்த கால கிரிக்கெட்டுடன் இன்றைய கிரிக்கெட்டினை ஒப்பிட முடியாது. சிலவேளைகளில், இன்னும் 10 வருடங்களில் கிரிக்கெட் மேலும் மாற்றமடையலாம்” என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை புதிதாக நடாத்தவுள்ள டி20 டேஸ்டிநேசன் லீக் (Global Destination League) போட்டிகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. எனினும் இந்திய வீரர்கள் இல்லாத போது குறித்த போட்டிகளின் வெற்றி கேள்விக்குறியானதே.

“யார் எது சொன்னாலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அந்த போட்டிகளில் பங்குபற்றவில்லை என்றால் பெரியளவில் கிரிக்கெட் ரசிகர்களை உள்வாங்குவது கடினமே. ஏனெனில், எல்லோருக்கும் இந்திய வீரர்கள் அவசியம். அவர்களுக்கு குறித்த போட்டிகளில் பங்குபற்ற அனுமதி வழங்கப்படவில்லை என்றால், IPL போன்று பாரிய தாக்கத்தினை ஏற்றபடுத்துவது கடினமே” என்று மேலும் தெரிவித்தார்.

முரளிதரனின் அறிவுறுத்தலின் கீழ் IPL போட்டிகளுக்கு உள்வாங்கப்பட்ட ரஷித் கான் குஜராத் லயன் அணிக்கெதிரான போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய அதேநேரம், IPL தொடரில் கூடிய விக்கெட்டுகளை கைப்பற்றும் நடப்பு வீரருக்கான ஊதா நிற தொப்பியை தன்னகத்தே வைத்துள்ளார்.

“நாங்கள் அவரை தெரிவு செய்தற்கு காரணம், அவர் விளையாடிய சர்வதேச போட்டிகளை நாம் பார்த்தோம். சிறந்த துடுப்பாட்ட வீரர்களை சாவாலுக்குட்படுத்தும் வகையில் பந்து வீசியிருந்தார். வழமையான சுழல் பந்து வீச்சாளர்களை விட இவருடைய பந்துவீச்சு சற்று வேகமானது. IPL பந்து வீச்சாளர் என்ற வகையில் அவருக்கு என்ன செய்ய வேண்டுமென்று அவருக்கு தெரியும். எங்களால் அவரை சிறப்பாக பந்து வீச ஊக்கப்படுத்த முடியும்” என்று இறுதியாக தெரிவித்தார் முரளிதரன்.