நியூ ஸ்டாரின் வெற்றி பறிப்பு: புளூ ஈகல்ஸ் அரையிறுதியில்

693
Blue Eagles awarded

நடைபெற்றுவரும் வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதி ஒன்றில் புளூ ஈகல்ஸ் அணியை நியூ ஸ்டார் அணி 2 –1 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட போதும், தற்போது அந்த வெற்றி புளூ ஈகல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.  

>> வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண அரையிறுதியில் ஜாவா லேன், நியூ ஸ்டார் அணிகள்

கடந்த திங்கட்கிழமை இரவு சுகததாச அரங்கில் இடம்பெற்ற நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் புளூ ஈகல்ஸ் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான மோதலில், அனஸ் பெற்ற சிறந்த இரண்டு கோல்களினால் நியூ ஸ்டார் அணி 21 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு தெரிவாகியது. 

இந்த தொடரின் விதிமுறைகளுக்கு அமைய, குறித்த ஒரு போட்டியில் ஆடும் அணியில் கட்டாயம் 19 வயதுக்குட்பட்ட வீரர் ஒருவர் விளையாட வேண்டும். எனினும், புளூ ஈகல்ஸ் அணிக்கு எதிரான குறித்த போட்டியில் நியூ ஸ்டார் அணியின் 7ஆம் இலக்க ஜேர்சி அணிந்திருந்த M.A.M. அஸ்கர் (200229310077) என்ற பெயருடைய வீரர் 19 வயதின்கீழ் வீரர் என அடையாளப்படுத்தப்பட்டு விளையாடிய போதும், அதில் உண்மையில்லை என புளூ ஈகல்ஸ் அணியினால் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இந்த விடயம் குறித்த விசாரணைகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், நியூ ஸ்டார் அணி போலி ஆவணங்களை தயாரித்து, குறித்த வீரரை விளையாட வைத்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நியூ ஸ்டார் அணியின் குறித்த வெற்றி பறிக்கப்பட்டு, புளூ ஈகல்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

>> அரையிறுதிக்கு முன்னேறியுள்ள கொழும்பு மற்றும் ரெட் ஸ்டார்ஸ்

இதனால், ஏற்கனவே தெரிவாகியுள்ள ஜாவா லேன் விளையாட்டுக் கழகம், கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ரெட் ஸ்டார்ஸ் கால்பந்து கழகம் என்பவற்றுடன் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பினை புளூ ஈகல்ஸ் அணியினர் பெற்றுள்ளனர். 

இந்த தொடரில் B குழுவில் அங்கம் வகித்த நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் குழு நிலையில், எந்தவொரு தோல்வியையும் சந்திக்கவில்லை. பலம் மிக்க ரினௌன் மற்றும் நியூ யங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளை வென்ற நியூ ஸ்டார் வீரர்கள் மாத்தறை சிட்டி அணிக்கு எதிரான போட்டியை சமன் செய்தனர். இவர்கள் குழு நிலைப் போட்டிகளில் எதிரணிகளுக்கு எந்தவொரு கோலையும் விட்டுக் கொடுக்காமை குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<