மூன்றாவது T20I போட்டியில் மாற்றங்களை ஏற்படுத்த தயாராகும் இலங்கை!

Bangladesh Tour of Sri Lanka 2025

25

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது T20I போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோவை விளையாட வாய்ப்பது தொடர்பில் சிந்தித்து வருவதாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மூன்றாவது T20I போட்டிக்கான ஊடவியலாளர் சந்திப்பு இன்று (15) இடம்பெற்ற போதே சனத் ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

>>வெறும் 27 ஓட்டங்களுடன் சுருண்டு படுதோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள்

பயிற்சிகளின் போது சிறப்பாக துடுப்பெடுத்தாடும் அவிஷ்க பெர்னாண்டோ போட்டிகளில் தடுமாறுவது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த சனத் ஜயசூரிய,

இதுதொடர்பில் நாம் அதிகமாக கலந்துரையாடியுள்ளோம். அவிஷ்கவுடனும் கலந்துரையாடியுள்ளோம். குறிப்பாக கிரிக்கெட்டை தவிர்த்து உளரீதியாக எம்முடைய ஆதரவை அவருக்கு கொடுக்க வேண்டும். அவருடைய கிரிக்கெட் திறமை மிகவும் சிறந்தது.

தனிப்பட்ட ரீதியில் நான், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் அணித்தலைவர் ஆகியோர் இணைந்து அவருக்கு நம்பிக்கையை கொடுப்பதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம். அவருக்கு எவ்வாறு உதவுவது என்பதை பார்க்க வேண்டும்.

அவிஷ்கவுக்கு திறமை இருக்கிறது. ஆனால் அவர் அதனை மைதானத்தில் வெளிக்காட்ட வேண்டும். இல்லையென்றால் அதில் கேள்வி எழும்பும். எனவே அவிஷ்க தொடர்பில் நாம் சற்று பார்வையிடவேண்டும்” என்றார்.

இதேவேளை நீண்ட காலமாக T20I குழாத்தில் இடம்பெற்றுவரும் தினேஷ் சந்திமாலுக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

“சந்திமாலுக்கு எந்த இடத்திலும் விளையாட முடியும். அனுபவமான வீரர். அணிக்காக எதனையும் செய்யக்கூடியவர். டெஸ்டில் மூன்றாம் இலக்கத்தில் களமிறங்க கூறியவுடன் நாட்டுக்காக அதனை செய்தார். நாளை இந்த இடத்தில் விளையாடுங்கள் என நான் கூறினால் நம்பிக்கையுடன் செய்வார்.

>>WATCH – லிடன் மற்றும் பந்துவீச்சாளர்களின் பிரகாசிப்புடன் பங்களாதேஷ் அபார வெற்றி

சந்திமாலுக்கு முதல் நான்கு இடங்களில் எந்த இடத்திலும் விளையாட விருப்பம். இப்படி ஒரு வீரர் அணியில் இருப்பது சிறந்ததாகும். நீண்டகாலமாக இருக்கும் அவருக்கு T20I பதினொருவரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நாளை சிறந்த வாய்ப்பாக இருக்கும் என கருதுகிறேன் என்றார்.

அதுமாத்திரமின்றி இலங்கை அணியில் துடுப்பெடுத்தாடக்கூடிய பந்துவீச்சாளர்களை அணியில் இணைத்திருந்தாலும், நாளைய போட்டியில் முதற்தர துடுப்பாட்ட வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் எனவும் சனத் ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<