இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் அஞ்செலொ மெதிவ்ஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் அஞ்செலோ மெதிவ்ஸ் இறுதியாக விளையாடவுள்ளார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
>>மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் இருந்து விலகும் ஜொப்ரா ஆர்ச்சர்<<
இலங்கை தேசிய அணியின் மிக திறமைவாய்ந்த சகலதுறை வீரராக அறிமுகமாகிய அஞ்செலோ மெதிவ்ஸ், உபாதை காரணமாக தன்னுடைய கிரிக்கெட்டின் அதீத காலத்தை துடுப்பாட்ட வீரராக மாத்திரம் செலவிட்டிருந்தார்.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய இவர், 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதம் மற்றும் 45 அரைச்சதங்கள் அடங்கலாக 44.62 என்ற ஓட்ட சராசரியில் 8167 ஓட்டங்களை குவித்துள்ளார்.
அதுமாத்திரமின்றி பந்துவீச்சை பொருத்தவரை ஒரு நான்கு விக்கெட் குவிப்பு அடங்கலாக 33 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.
இலங்கை டெஸ்ட் அணியிலிருந்து குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன போன்ற முன்னணி மத்தியவரிசை வீரர்கள் ஓய்வுபெற்ற பின்னர் இலங்கை டெஸ்ட் அணியின் மத்தியவரிசை துடுப்பாட்டத்தின் தூணாக அஞ்செலோ மெதிவ்ஸ் விளங்கியிருந்தார்.
அஞ்செலோ மெதிவ்ஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றாலும் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<