முதலாவது இருதரப்பு T20 தொடரில் மோதவுள்ள ஆப்கான் – பங்களாதேஷ்

382
Getty Images

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கிடையில்  ஜூன் மாத ஆரம்பத்தில் இந்தியாவின் தெஹ்ரதன் நகரில் இடம்பெறுமாறு மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

கோஹ்லியின் ஓய்வினால் இந்திய அணியின் தலைவராக ரஹானே

ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்த பிறகு இந்திய அணி ஆப்கானிஸ்தான் மற்றும் …

ஜூன் மாதம் 3 ஆம், 5 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த T20 தொடர் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அண்மையில் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைவாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதோடு, இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறுகின்ற முதலாவது இருதரப்பு T20 தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெஹ்ரதன் நகரில் பங்களாதேஷ் அணியுடன் ஜூன் மாதம் நடைபெறும் T20 தொடரினை ஒழுங்கு செய்ததில் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வாரியம் மிகவும் சந்தோசமடைகின்றது. இதன் மூலம் இரண்டு அணியினரும் போட்டித் தன்மைமிக்க கிரிக்கெட் விளையாட எதிர்பார்த்திருக்கின்றோம். இதேவேளை, கிரிக்கெட் இரசிகர்கள் கடந்த காலங்களில் இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்று முடிந்த போட்டிகளை மிகவும் ரசித்துப் பார்த்திருந்தனர். அப்படியான ஒரு சந்தர்ப்பம் இத் தொடர் மூலம் மீண்டும் உருவாக்கி தரப்படுகின்றது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அதிப் மிஷால் குறிப்பிட்டிருந்தார்.  

இந்த தொடர் மிகவும் போட்டித்தன்மை மிக்க ஒன்றாக அமையும் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் நிறைவேற்று அதிகாரி நிசாமுத்தின் சௌத்ரியும் கூறியிருந்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், இவ்வகை போட்டிகளுக்குரிய (T20) மிகத் திறமையான சில வீரர்களை ஆப்கான் அணி வைத்திருக்கின்றது. அதோடு, தொடர் இடம்பெறப் போகின்ற தெஹ்ரதன் மைதானமும் அவர்களுக்கு பரீட்சயமான ஒன்று. எனவே, அவர்களுக்கே (ஆப்கான் அணிக்கே) அனுகூலமான விடயங்கள் இருக்கின்றன. எனினும், பங்களாதேஷ் அணி அனுபவமிக்க குழாம் ஒன்றிணைக் கொண்டிருப்பதால் இத்தொடரில் நாமும் நல்ல முடிவுகளை எதிர்பார்த்திருக்கின்றோம். “ எனக் கூறியிருந்தார்.

கிரிக்கெட் விளையாட்டில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற ஆப்கானிஸ்தான் நாட்டில் சர்வதேசப் போட்டிகள் இடம்பெறுவதில்லை. இதன் காரணமாக அந்நாடு, தமது சொந்த மைதானமாக இந்தியாவில் உள்ள மைதானங்களிலேயே போட்டிகளை நடத்துகின்றது.  

இந்த இருதரப்பு T20 தொடருக்கு முன்னதாக இரண்டு அணிகளும் ஒரேயொரு T20 போட்டியிலேயே மோதியிருந்தன. 2014 ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுக்களால் ஆப்கான் அணியினை தோற்கடித்து இருந்தது. எனினும், தற்போதைய T20 அணிகளுக்கான தரவரிசையில் ஆப்கான் அணி 8 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் அணி 10 ஆவது இடத்திலும் இருக்கின்றமையினால் பழைய முடிவுகளை வைத்து இத்தொடரில் ஆதிக்கம் காட்டப் போகும் அணி எதுவென்பதை தீர்மானிக்க முடியாதுள்ளது.

இந்த T20 தொடர் முடிவடைந்த பின்னர், ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியுடன் ஜூன் மாதம் 14 ஆம் திகதி பெங்களூரில் இடம்பெறவுள்ள தமது கன்னி டெஸ்ட் போட்டியில் மோதுகின்றது.

T20 தொடர் அட்டவணை

முதலாவது T20 போட்டி – ஜூன் 3 ஆம் திகதி, இரவு 8 மணி

இரண்டாவது T20 போட்டி – ஜூன் 5 ஆம் திகதி, இரவு 8 மணி

மூன்றாவது T20 போட்டி – ஜூன் 7 ஆம் திகதி, இரவு 8 மணி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…