இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தால் இலங்கை அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்துள்ளது.
இங்கிலாந்து அணி நிர்ணயித்திருந்த 279 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 29 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியில் மழை குறுக்கிட்டது. மழைக்குறுக்கிடும் போது இலங்கை அணிக்கான டக்வத் லூவிஸ் வெற்றி இலக்கு 171 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 140 ஓட்டங்களையே பெற்றிருந்த இலங்கை அணி, 31 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது.
>> அகில தனன்ஜய திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் – ஜோ ரூட்
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை குவித்தது. இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் ஓட்டங்களின்றி தங்களது முதல் விக்கெட்டை இழந்த போதும், ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்துடன் ஓட்டங்களை குவித்தனர்.
இயன் மோர்கன் சிறப்பாக ஆடி அதிகபட்சமாக 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, ஜோ ரூட் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களுக்கு அடுத்தப்படியாக ஜோஸ் பட்லர் 28 ஓட்டங்களையும், ஜொனி பெயார்ஸ்டோவ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சை பொருத்தவரையில் லசித் மாலிங்க நீண்ட நாட்களுக்கு பின்னர், அவரது “யோர்க்கர்” பந்துகளின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஒருநாள் போட்டிகளின் தனது எட்டாவது ஐந்து விக்கெட் குவிப்பினை கைப்பற்றிய இவர், 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு அடுத்தப்படியாக நுவன் பிரதீப், அகில தனன்ஜய, தனன்ஜய டி சில்வா மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.
Photo Album – Sri Lanka vs England | 2nd ODI
பின்னர், 279 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய உபுல் தரங்க ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்க, நிரோஷன் திக்வெல்ல 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, களமிறங்கிய அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் தசுன் சானக ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அணிக்கு சற்று நம்பிக்கை கொடுத்த குசல் பெரேரா மற்றும் அகில தனன்ஜய ஜோடி 43 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, துரதிஷ்டவசமாக குசல் பெரேரா (30) லியாம் டவ்ஸனின் பந்து வீச்சில் ஜேசன் ரோயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
>> ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக்கில் அசத்தி வரும் இசுரு உதான
தொடர்ச்சியாக இலங்கை அணியின் விக்கெட்டுகள் ஒரு பக்கம் அடுத்தடுத்து வீழ்த்தப்பட, தனன்ஜய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்த திசர பெரேரா வேகமாக ஓட்டங்களை விளாசினார். எனினும், திசர பெரேரா 44 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 36 ஓட்டங்களையும் பெற்றுத் துடுப்பெடுத்தாடிய போது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. ஆட்டம் நிறுத்தப்படும் போது, இலங்கை அணி 29 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை பெற்றிருந்தது.
எவ்வாறாயினும் போட்டியை மீண்டும் ஆரம்பிக்க முடியாதவாறு மழை குறுக்கிட்டு வந்ததால், இங்கிலாந்து அணிக்கு டக்வத் லூவிஸ் முறைப்படி வெற்றி வழங்கப்பட்டது. இதன்படி இலங்கை அணி சார்பில் திசர பெரேரா 44 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோகஸ் 3 விக்கெட்டுகளையும், ஒல்லி ஸ்டோன் மற்றும் லியாம் டவ்ஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்படி, இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலைபெற்றுள்ளது. இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகள் 17 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<




















