டி20 அணிகள், வீரர்களின் தரவரிசைகளில் எதிர்பாராத மாற்றங்கள்

369
Pakistan Cricket
GettyImages

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி முடிவின் பின்னரான புதிய டி20 அணிகள் மற்றும் வீரர்களுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்பாராத மாற்றங்கள் சில தரவரிசையில் நிகழ்ந்துள்ளன.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஒரு போட்டியை கொண்ட டி20 தொடர் நேற்று (05) நிறைக்கு வந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்து. இந்நிலையில் குறித்த தொடரின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய டி20 அணிகள் மற்றும் வீரர்களினுடைய தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி நாளை இங்கிலாந்து பயணம்

பாகிஸ்தான் அணியின் சகலதுறை சுழற்பந்துவீச்சாளரான இமாட் வஸீம் நேற்றைய போட்டியின் மூலம் டி20 சர்வதேச பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் காணப்பட்ட பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு சகலதுறை சுழற்பந்துவீச்சாளரான சதாப் கான் மற்றும் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஆதில் ரஷீட் ஆகியோரை பின்தள்ளி நான்காமிடத்திலிருந்து இரண்டாமிடத்திற்கு உயர்ந்துள்ளார்.

குறித்த போட்டியில் இமாட் வஸீம் நேர்த்தியான முறையில் பந்துவீசியிருந்தார். ஆதில் ரஷீட் குறித்த போட்டியில் விளையாடியிருந்தாலும் அவரால் விக்கெட்டுக்கள் எதனையும் வீழ்த்த முடியாமல் போனதால் அவருக்கு ஒரு நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் குறித்த தொடரில் சகலதுறை வீரரான சதாப் கான் இடம்பெற்றிருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக உலகக்கிண்ணத்தை கருத்திற்கொண்டு ஓய்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான சஹீன் அப்ரிடி நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் புதிய தரவரிசையில் மூன்று நிலைகள் உயர்ந்து 47ஆவது நிலையை அடைந்துள்ளார். மேலும் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக டொம் கரன் 21 நிலைகள் உயர்ந்து 85 ஆவது நிலையை அடைந்துள்ளார். பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ரஷீட் கான் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

டி20 சர்வதேச துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படும் பாக். அணி வீரர் பாபர் அசாம் நேற்றைய போட்டியில் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் மேலும் 11 தரவரிசை புள்ளிகளை அதிகரித்துக்கொண்டு முதலிடத்தில் நீடிக்கின்ற அதேவேளை இதன் மூலம் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளையும் (896) பெற்றுள்ளார். மேலும் அரைச்சதம் கடந்த ஹாரிஸ் சொஹைல் 141ஆவது நிலைக்கு உயர்ந்துள்ளார்.

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது அரைச்சதம் கடந்து ஆட்டநாயகன் விருது வென்ற அணித்தலைவர் இயன் மோர்கன் மூன்று நிலைகள் உயர்ந்து 22 ஆவது இடத்திற்கும், மறுமுனையில் அணியின் வெற்றிக்கு பங்காளியாக திகழ்ந்த ஜோ ரூட் இரண்டு நிலைகள் உயர்ந்து 19 ஆவது இடத்தையும் அடைந்துள்ளனர். மேலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் சகலதுறை வீரரான ஜோ டென்லி ஆகியோரும் துடுப்பாட்ட தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து அணி நேற்று (05) பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் புதிய டி20 சர்வதேச அணிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் காணப்பட்ட தென்னாபிரிக்க அணியை பின்தள்ளி ஐந்து தரவரிசை புள்ளிகளை மேலதிகமாக பெற்று இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலிடத்தில் காணப்பட்ட பாகிஸ்தான் அணி நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும் மூன்று தரவரிசை புள்ளிகளை இழந்து 283 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றது.

உலகக் கிண்ணத்துக்கு முன் மாலிங்கவுக்கு ஓய்வு

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் (08) லண்டனில் ஆரம்பமாகவுள்ளது.

டி20 அணிகளின் புதிய தரவரிசை (முதல் பத்து அணிகள்)

  1. பாகிஸ்தான் – 283 புள்ளிகள்
  2. இங்கிலாந்து – 266 புள்ளிகள்
  3. தென்னாபிரிக்கா – 262 புள்ளிகள்
  4. அவுஸ்திரேலியா – 261 புள்ளிகள்
  5. இந்தியா – 260 புள்ளிகள்
  6. நியூசிலாந்து – 254 புள்ளிகள்
  7. ஆப்கானிஸ்தான் – 241 புள்ளிகள்
  8. இலங்கை – 227 புள்ளிகள்
  9. மேற்கிந்தியதீவுகள் – 226 புள்ளிகள்
  10. பங்களாதேஷ் – 220 புள்ளிகள்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க