தொடர்ச்சியான திறமை வெளிப்பாட்டின்மூலம் வடக்கின் முதல்தர கால்பந்துக் கழகமாகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம், தற்பொழுது தேசிய மட்டத்தின் கால்பந்துத் துறையைச் சேர்ந்த பலராலும் பேசப்படும் ஒரு கழகமாக மாற்றம் பெற்றுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு பிரிவு-2 இன் சம்பியனாகத் தெரிவாகி, அதன்மூலம் 2016இல் பிரிவு-1 இனுள் நுழைந்த இவர்கள், பிரிவு 1இல் காலிறுதி வரை முன்னேறியிருந்தனர். அதிரடி முன்னேற்றம் கண்டுள்ள இவர்கள் இம்முறை பிரிவு-1 மற்றும் FA கிண்ணம் ஆகிய இரண்டு தொடர்களிலும் இறுதிக்குள் நுழைய எதிர்பார்த்து நிற்கின்றனர்.

சென். மேரிஸின் கோல் மழையில் நனைந்தது துரையப்பா அரங்கு

2016/17 பருவகாலத்திற்கான FA கிண்ண சுற்றுப் போட்டியின் இறுதி 32 அணிகளுக்கிடையிலான..

2015ஆம் அண்டு

கடந்த 2015இல் வடக்கின் வல்லவன், புதிய விடியல், மைலோ, அரலி .எல், மட்டுவில் வளர்மதி, உரும்பிராய் சென்.மைக்கல் என வடக்கின் அனேக கிண்ணங்களைத் தனதாக்கிய சென்.மேரிஸ் அணி, அவ்வருடத்தில் அரியாலை உதைபந்தாட்டப் பயிற்சி மைதானத்தில் இடம்பெற்ற நீயூ யங்ஸ் லெவன் அணியுடனான பிரிவு-2இன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்திருந்தது. அப்போட்டி, 1-1 என சமநிலையில் நிறைவடைய, பெனால்டி உதை மூலம் சென்.மேரிஸ் வெற்றி பெற்றமை நினைவுகூறத் தக்கது.

2016ஆம் அண்டு

2016ஆம் ஆண்டு பெருமளவாக சோபிக்கத் தவறியிருந்தது சென். மேரிஸ். இருந்தபோதும் திக்கம் இளைஞர் கிண்ணத்தைத் தமதாக்கியிருந்தனர். கடந்த வருடம் பிரிவு-1 சுற்றுப் போட்டியில், நடப்புச் சம்பியனான பலம் வாய்ந்த மொரகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழக அணியை யாழில் 2-1 என வெற்றிகொண்டனர். எனினும், அவர்கள் மொரகஸ்முல்ல யுனைடட் அணியின் சொந்த மைதானத்தில் துரதிஷ்டவசமாக 2-0 என தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிவு-1இன் காலிறுதி வரை முன்னேறியிருந்த சென்.மேரிஸ் அணி, காலிறுதியில் பெலிகன்ஸ் அணியுடனான 2-0 என்ற தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியது. கடந்த வருடத்தில் அணியின் வீழ்ச்சிக்கு முன்னணி வீரர்களது உபாதை பெருமளவாகத் தாக்கம் செலுத்தியிருந்தது.

2017ஆம் அண்டு

இவ்வருடத்தின் ஆரம்பத் தொடர்கள் அத்தனையிலும் அசத்திக்கொண்டிருக்கின்றது சென்.மேரிஸ். இதுவரையில் ஒரேயொரு தோல்வியினை மட்டுமே சந்தித்திருக்கின்ற இவர்கள், டான் ரி.வி புதிய விடியல் சுற்றுத் தொடரில் அரையிறுதிவரை முன்னேறியிருந்தனர். இதன்மூலம் இவர்கள் தமது சிறந்த ஆரம்பத்தை வெளிப்படுத்தினர்.

அதேபோன்று, இந்த பருவகால FA கிண்ணச் சுற்றுப் போட்டியில்  புத்தளம் லிவர்பூல், விம்பிள்டன் அணிகளுடனான வெற்றிகளைத் தொடர்ந்து, தமது காலிறுதி வாய்ப்பினை உறுதி செய்வதற்காக சுப்பர் சன் அணியுடன் களங்காணவுள்ளனர்.

அணியின் தற்போதைய நிலை

அணியின் முன்னணி வீரர்களான யூட் மற்றும் ஜெனட் ஆகியோர் உபாதை காரணமாக தொடர்ந்தும் ஓய்விலிருக்கின்றனர். அது அணிக்கு பின்னடைவாக இருக்கின்ற போதும், இளைய வீரர்களான யாழ். மத்திய கல்லூரி அணித் தலைவர் றெக்னோ மற்றும் மதிவதனன் ஆகியோர் முன்களத்திற்குப் பலம் சேர்க்கின்றனர்.

முன்களத்தில் ஆடிய ஜக்சன் மத்திய களத்திற்கு மாற்றப்பட்டு, அணியின் மத்திய களம் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் 23 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியில் ஆடிய மேரிஸின் நம்பிக்கைக்குரிய வீரரான நிதர்சன் மற்றும் அவருடன் இணைந்து எபிரோன் யூட் ஆகியோர் மத்திய களத்தில் ஆடுகின்றனர்.

மத்திய களத்தை ஜக்சன், சார்ள்ஸ், அமிற்றன், ஜொனிற்றன், பிரான்ஸிஸ் ஆகியோரும் பலப்படுத்துகின்றனர்.

மேரிஸின் பலமெனக் கருதப்படும் பின்களத்தில் அணித் தலைவர் யுனிற்றன், ஜேம்ஸ், சுதர்சன், நிறோ, ஜான்சன் ஆகியோர் ஆடி வருகின்றனர். கோல் காப்பாளராக சுதர்சன் செயற்படுகின்றார். அண்மைக்காலமாக நிதர்சன், அன்ரன் சார்ள்ஸ், எபிரோன், றெக்னோ ஆகியோர் சிறந்த முறையில் பிரகாசித்து வருகின்றமை அணிக்கு அனுபவ ரீதியில் மேலும் பலம் சேர்க்கவுள்ளது.   

அணியின் முன்னனி வீரர்கள்

மரியதாஸ் நிதர்சன்-அன்ரன் சார்ள்ஸ்-அன்ரனி யுனிற்றன்- ஜெக்சன்

பயிற்றுவிப்பாளர்

யாழின் முன்னணி பயிற்றுவிப்பாளர்களுள் ஒருவரான சுரேந்திரன் அவர்கள் அண்மையில் இக்கழகத்திற்கு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பயிற்றுவிப்பின் கீழ் அணியின் பெறுபேற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கழம் எதிர்கொண்டுள்ள சவால்கள்

சென்.மேரிஸ் அணிக்கு பெரும் குறைபாடாக இருப்பது அணியின் குழாம் மிகவும் சிறியதாகக் காணப்படுவதே. குறிப்பாக வீரர்கள் உபாதையடையும்போது அவர்களைப் பிரதியீடு செய்யக்கூடிய வீரர்கள் முதற் பதினொருவரை விட வெளியே இல்லாமை முக்கிய சவாலாக உள்ளது. எனினும் அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது புதிய பயிற்றுவிப்பாளரின் முக்கிய பொறுப்பாக உள்ளது.

சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் நிறுவப்பட்டு இற்றைக்கு 75 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இதுவரையில் கழகத்திற்கு என்று சொந்த மைதானம் ஒன்றினைப் பெறமுடியவில்லை. இது கழகத்தின் வளர்ச்சிக்கு பாரிய தடையாகவே உள்ளது.  விளையாட்டு அமைச்சர் வரையிலும் இப்பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்ட போதும் நிலையான தீர்வு இதுவரையில் வழங்கப்படவில்லை.

பிரிவு-1 இல் ஆடிவருகின்ற போதிலும் அணி வெறுமனே நாவாந்துறை பிரதேச வீரர்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அதற்கும் மேலதிகமாக இந்த அணி இன்று வரை ஓர் பொழுது போக்கு சார் உதைபந்தாட்டத்தையே விளையாடி வருகின்றது.

இக்கழக வீரர்கள் அனுசரணையாளர் என யாரும் இன்றி பலத்த சிரமத்தின் மத்தியிலேயே வெளி மாவட்டப் போட்டிகளில் பங்கெடுத்து, வெற்றிகளைக் குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக

இவ்வருட FA கிண்ண சுற்றுப் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாது என்பதை சாதகமாகப் பயன்படுத்தி தொடரின் இறுதிவரை முன்னேறுவது, அவ்வாறே தமது கடந்தகால தேசிய மட்ட அனுபவங்களை வைத்து பிரிவு-1இல் கிண்ணத்தைக் கைப்பற்றி, அடுத்த வருடம் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் நுழைதல் போன்ற மிகப் பெரிய இலக்குகளுடன் பயணிக்கின்றது நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்.