யதுசனின் சதத்துடன், மேலும் ஒரு வெற்றியை பதிவுசெய்த சென். ஜோன்ஸ் கல்லூரி

420

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் டிவிசன் 2 பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது சுற்று போட்டியொன்றில் யாழ்ப்பாணம்,சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் பங்கெடுத்திருந்தன. இரண்டு நாட்களைக் கொண்ட போட்டியானது சென் ஜோன்ஸ் கல்லூரிமைதானத்தில் இடம்பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரீ பிரியரத்ன அணியானது முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 60 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்ட வேளை தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது.

முதலாவது விக்கெட்டுக்காக 41 ஓட்டங்களினைப் பகிர்ந்திருந்த வேளையில் தனுசன்( 16) ஆட்டமிழந்திருந்த போதும் சௌமியன், சேரோபன் முறையே 32,29 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்கள்  சந்தரு ஷனில்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த போதிலும் அணித்தலைவர் யதுசன் சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடி சதம் கடந்திருந்தார்.

பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட பிரியரத்ன அணியின் சந்தரு னில்க 98 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

பின்னர் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியிருந்த ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணியானது 123 ஓட்டங்களிற்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தனர். அதிகபட்சமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான  அணித்தலைவர் கவிந்து நிமேஷ் மற்றும் றஜித்த அஷான் ஆகியோர் 25 ஓட்டங்களினைப் பெற்றுக்கொடுத்திருந்தனர். தொடர்ந்துவந்த வீரர்கள் அபினாஷ் மற்றும் கபில்ராஜ்ஜினது பந்துவீச்சில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

சென்.ஜோன்ஸ் அணியின் பந்துவீச்சில்  இடது கை சுழற்பந்து வீச்சாளரான அபினாஷ் 25 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

149 ஓட்டங்கள் பின்னிலையில் தொடர்ச்சியாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியிருந்த ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணி  முதலாவது விக்கெட்டினை விரைவாக இழந்திருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸிலும் கவிந்து நிமேஷின் 31 ஓட்டங்கள், முறையே கவிந்து ஈஸ்வர மற்றும் ஜசிறு டினித் ஆகியோரது 23,24 ஓட்டங்களின் துணையுடன்  சிறப்பான ஆரம்பத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து வந்த வீரர்கள் கபில்ராஜ், யதுசன் ஜோடியின் பந்து வீச்சிற்கு தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுக்க, ஹெசான் கவிந்த 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பின்வரிசை விரர்களால் இரட்டை இலக்க ஓட்டத்தினைச் சேகரிக்க முடியாது போனாலும் கூட , பலத்த போராட்டத்தின் பயனாக இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணி.

இந்த இன்னிங்சின் பந்துவீச்சில் கபில்ராஜ் 5 விக்கெட்டுக்களையும் யதுசன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.  இதனையடுத்து 05 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கிக் களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி விக்கெட்இழப்புக்கள் ஏதுமின்றி இலக்கை எட்டியது.

கடந்த போட்டியில் ஸ்ரீ சுமங்கல கல்லூரிக்கெதிராக இன்னிங்ஸ் மற்றும் 20 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரு துறைகளிலும் சிறப்பான செயற்பாட்டுடன் கிடைத்திருக்கக் கூடிய இன்றைய போட்டியின் வெற்றியானது, எதிர்வரும் போட்டிகளை எதிர்கொள்ள மிகவும் உந்துதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப் போட்டித்தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென். ஜோன்ஸ் கல்லூரி அணியானது 02 போட்டிகளில் முழுமையான வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ளது. அதேவேளை ஒரு போட்டி சமநிலையிலும் நிறைவடைந்துள்ளது.

எதிர்வரும்போட்டிகளில் சென்.  ஜோன்ஸ் கல்லூரி கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, கேகாலை கேகளு வித்தியாலயம் மற்றும் களனி ஸ்ரீ தர்மலோகா கல்லூரி அகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டிச் சுருக்கம்

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 272/9d (60 ஓவர்கள்) வசந்தன் யதுசன் 106, நாகேந்திரராசா சௌமியன் 32, தேவதாஸ் செரோபன் 29, வடிவேலு அபிலக்சன் 28, சந்தரு ஷனில்க 7/98

ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலயம் (முதலாவது இன்னிங்ஸ் ) – 123/10 (53 ஓவர்கள்)  கவிந்து நிமேஷ் 25, றஜித்த அஷான் 25, மேர்ஃபின் அபினாஷ் 6/25, கனகரட்னம் கபில்ராஜ் 3/43

ஸ்ரீ தர்மரத்ன மகாவித்தியாலயம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 153/10 (50.2 ஓவர்கள்) F/O கவிந்து நிமேஷ் 31, ஹேஷான் கவிந்த 29, கனகரட்னம் கபில்ராஜ் 5/34, வசந்தன் யதுசன் 3/33

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) –  05/00 (1.4 ஓவர்கள்)

முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி