துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் சமரவீர இன்றி இந்தியா சென்ற இலங்கை அணி

276
Sri Lanka arrive in India without batting coach Samaraweera

ஏழு வார கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடன், புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றுள்ள திலான் சமரவீரவுக்கு அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இந்தியா செல்வதற்கான விசா உரிய நேரத்தில் கிடைக்காததன் காரணமாகவே புதன்கிழமை காலை கொல்கத்தா சென்றடைந்த இலங்கைக் குழுவுடன் திலான் சமரவீரவுக்கு பயணம் மேற்கொள்ள முடியாமல் போனது.

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீர

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர…

இலங்கை அணியின் முன்னாள் மத்திர வரிசைத் துடுப்பாட்ட வீரரான திலான், இம்மாதம் நான்காம் திகதி இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் வசித்து வந்த அவர் கடந்த திங்கட்கிழமை (6) இலங்கை வந்தடைந்தார்.

 எனினும், இதுவரை அவர் இலங்கை அணியுடன் எந்தவொரு பயிற்சியிலும் இணைந்துகொள்ளவில்லை. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இலங்கை அணி 8 நாட்கள் இந்தியாவில் இருக்க உள்ளதால் சமரவீர இந்தியாவில் இலங்கை அணிக்கான தனது முதல் பயிற்சிகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் கிரிக்பஸ் (Cricbuzz)  இணையத்திற்கு வழங்கிய தகவலுக்கு அமைய, திலான் சமரவீரவுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தியா பயணிப்பதற்கான விசா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 16ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கு முன்னர் இலங்கை வீரர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பதினொருவர் அணியுடன் (BCCI XI) இரண்டு நாட்கள் கொண்ட (11ஆம், 12ஆம் திகதி) பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளனர்.

சுமார் 7 வருட இடைவெளியின் பின்னர் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரொன்றில் விளையாடுவதற்கு சென்றுள்ள இலங்கை அணி, அவ்வணியுடன் அவர்களது சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெறும் எதிர்பார்ப்புடன் உள்ளது.

இலங்கை அணி இதுவரை இந்தியாவுடன் அவர்களது மண்ணில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 10 தோல்விகளை பெற்றுள்ள இலங்கை அணி, 7 போட்டிகளை சமநிலையில் முடித்துள்ளது.

இந்திய மண்ணில் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது கனவு: ஹேரத்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வது தான் என்னுடைய கனவு என இலங்கை…

அது தவிர, அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவுடனான டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 ஆகிய அனைத்து தொடர்களிலும் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை அணி பல தரப்பினரதும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியது.

அதன் பின்னர், தற்பொழுது இலங்கை தேர்வுக் குழு மற்றும் பயிற்றுவிப்பு குழு என்பவற்றில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை இந்தியாவுடனான எதிர்வரும் தொடர்களை முகம்கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.