கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓயும் தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர்

192
Courtesy - Cricketcountry.com

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர்களில் ஒருவரான அல்பி மோர்கல் தான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

37 வயதுடைய அல்பி மோர்கல் 2004 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணியின் 76 ஆவது ஒருநாள் வீரராக அறிமுகமானார். அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணியுடனேயே டி20 அறிமுகத்தையும் பெற்றுக் கொண்டார்.

2009 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் தன்னுடைய ஓய்வு வரையில் அந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியுடனேயே டெஸ்ட் வாழ்க்கையை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இறுதியாக 2012 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு இந்திய அணியுடன் நடைபெற்ற டி20 போட்டியில் இறுதியாக விளையாடியிருந்தார்.

58 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் துடுப்பாட்டத்தில் 782 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 50 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். டி20 சர்வதேச போட்டிகளில் 50 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 572 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 26 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

2015 ஆம் ஆண்டின் பின்னர் உள்ளுர் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்த நிலையிலேயே நேற்று (09) இவர் இந்த திடீர் அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஏராளமான டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை அல்பி மோர்கல் கொண்டுள்ளார். தென்னாபிரிக்காவின் ஈஸ்டர்ன்ஸ், டைடன்ஸ், டேர்பன் ஹீட் போன்ற அணிகளுக்காவும், இங்கிலாந்தின் டர்ஹம் கவுண்டி கிரிக்கெட் கழகம், சமர்செட், டேர்பைஷர் போன்ற கழகங்களுக்காவும், இந்தியன் ப்ரீமியர் லீக்கில் சென்னை சுப்பர் கிங்ஸ், ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களுர், டெல்லி டெயார்டெவிஸ் மற்றும் ரைஸிங் புனே சுப்பர்ஜைன்ட்ஸ் போன்ற அணிகளுக்காவும் விளையாடியுள்ளார்.

இவரது சகோதரனான மோர்னி மோர்கல் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அல்பி மோர்கல் சகல விதமான போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறித்துள்ளார்.

இவரது நண்பரும், தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரருமான மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் ஏ பி டிவில்லியஸ் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்துள்ள நிலையில் இவருடைய ஓய்வையும் சேர்த்து ஒரு வருட இடைவெளிக்குள் இவர்கள் மூவரும் தென்னாபிரிக்க அணியை விட்டு ஓய்வடைந்து செல்கின்றனர்.

நியூசிலாந்து எதிராக சாதனை படைத்த திசர பெரேரா தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

ஓய்வினை அறிவித்துள்ள சகலதுறை வீரர் அல்பி மோர்கலுக்கு முன்னனி  கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட வண்ணம் உள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<