16 ஐரோப்பிய அணிகள் கலந்துகொள்ளும் ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஸ் லீக் நொக் அவுட் சுற்றுப் போட்டிகளில் ஏற்கனவே சில போட்டிகள் முடிவுற்ற நிலையில், நேற்றைய தினம் மேலும் இரண்டு போட்டிகள் நடைபெற்றன.

ஆர்சனல் கால்பந்து கழகம் எதிர் பேயர்ன் மியுனிச் கால்பந்து கழகம்

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் முதல் முயற்சியாக மியுனிச் அணியின் விடோ அடித்த கோலை கோல் காப்பாளர் முறியடித்தார். தொடர்ந்து ஆக்ரோஷமாக இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் போட்டியின் 11ஆவது நிமிடம் அயார்ன் ரொபின் கோல் கம்பத்திலிருந்து சுமார் 35 மீட்டர் தூரத்திலிருந்து ஆர்சனல் அணியின் பலத்த களத்தடுப்பு வீரர்களின் ஊடாக ஊடறுத்து முதல் கோலை அடித்து அதிர்ச்சியளித்தார்.

எனினும் தொடர்ந்தும் போராடிய ஆர்சனல் அணிக்கு அதிஷ்டவசமாக போட்டியின் 30ஆவது நிமிடம் கிடைக்கபெற்ற பெனால்டியை கோல் காப்பாளர் மானுவல் நோயர் தடுத்த போதிலும் பந்து பெனால்டியை அடித்த அலெக்சிஸ் சான்செஸ்க்கு முன்னே சென்றதால் மீண்டும் சரியாக கோலுக்குள் அடித்து போட்டியை சமப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து போட்டி மேலும் விறுவிறுப்பான நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான உக்கிர போராட்டத்துக்கு மத்தியில் முதல் பாதி நேரம் 1-1 கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.

இரண்டாம் பாதி ஆரம்பித்து 53ஆவது நிமிடம் பின்கள வீரர் பிலிப் லாஹ்ம் உட்செலுத்திய பந்தினை ரொபர்ட் லெவண்டோவ்ஸ்கி தலையால் அடித்து கோலாக்கினார். அதனை தொடர்ந்து மூன்று நிமிடங்களின் பின் களத்தடுப்பு வீரர்களின் ஊடாக ஊடறுத்து லெவண்டோவ்ஸ்கி உட்செல்லுத்திய பந்தை உலகப் புகழ் பெற்ற நடுக்கள வீரர் தியாகோ அல்கன்ட்டரா கோலாக மாற்றினார்.

மீண்டும் போட்டியின் 63ஆவது நிமிடம் மைதானத்தின் மூலையிலிருந்து உள்வந்த பந்தினை பலத்த மோதலுக்கு மத்தியில் தியாகோ அல்கன்ட்டரா ஆர்சனல் களத்தடுப்பு வீரர்களினுடாக ஊடறுத்து கோல் அடித்து தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

ஐந்தாவதும் இறுதியுமான கோல் பின்கள வீரர் பந்தினை தவறவிட்டதால் அருகேயிருந்த தியாகோ அல்கன்ட்டரா அப்பந்தினை தோமஸ் முல்லர் பக்கமாக நகர்த்த, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட தோமஸ் முல்லர் அதை கோலாக மாற்றினார். அதேநேரம்  பேயர்ன் மியுனிச் அணிக்கு இரண்டு மஞ்சள் அட்டைகளும் ஆர்சனல் அணிக்கு மூன்று மஞ்சள் அட்டைகளும் காண்பிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஏழு தடவைகள் நடைபெற்ற 16 அணிகளைக் கொண்ட நொக்அவுட் போட்டிகளில், 6 காலிறுதிப் போட்டிகளில் பேயர்ன் மியுனிச் அணி வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாம் சுற்று எதிர் வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி லண்டனிலுள்ள ஆர்சனல் கால்பந்து கழகதின் சொந்த மைதானமான எமிரேட்ஸ் கால்பந்து அரங்கில் நடைபெறவுள்ளது.


ரியல் மெட்ரிட் கால்பந்து கழகம் எதிர் நாப்போலி

சண்டியாகோ பெர்னாபூ அரங்கில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் முதல் கோலை நாப்போலி அணி அடித்து முன்னிலை பெற்றிருந்த போதிலும், சொந்த மண்ணில் ஆக்ரோஷத்துடன் விளையாடிய ரியல் மெட்ரிட் கழகம் இறுதியில் 3-1 கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

போட்டியின் ஆரம்ப சில நிமிடங்களுக்குள் உலக புகழ்பெற்ற முன்கள வீரர் கரீம் பென்சிமா தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி மின்னல் வேகத்தில் கோலுக்குள் செலுத்திய பந்தை கோல் காப்பாளர் பெபே ரீனா அபாரமாக முறியடித்தார். தொடர்ந்தும் இவ்விரு அணிகளுக்கும் கிடைக்கபெற்ற பல வாய்ப்புக்கள் கைநழுவிச் சென்றன.

அதேநேரம், போட்டியின் எட்டாவது நிமிடம் கோல் கம்பத்திலிருந்து சுமார் 30மீட்டர் துரத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட லொரென்சோ இன்சைனி மின்னல் வேகத்தில் கோல் அடித்து நாப்போலி அணியை முன்னிலைப்படுத்தினார். எனினும் அவர்களுடைய மகிழ்ச்சி 10 நிமிடம் கூட நீடிக்கவில்லை.

டானியல் கார்வஜால் மூலாமாக கோல் கம்பத்துக்கு அருகாமையில் பெற்றுக்கொண்ட பந்தை கரீம் பென்சிமா இம்முறை சரியாக தலையால் அடித்து கோலொன்றை பெற்றுக்கொண்ட அதேவேளை தனது 51ஆவது கோலாக பதிவு செய்து கொண்டார். அத்துடன் இது அவர் ஏழு போட்டிகளுக்கு பின்னர் பெற்றுக்கொண்ட முதலாவது கோலாகவும் பதிவானது. அந்த வகையில் போட்டியின் முதல் பாதி 1-1 கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.

இரண்டாம் பாதி நேரம் ஆரம்பித்து 49ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் கம்பத்திற்கு அருகே நின்ற டோனி க்ரூசுக்கு நகர்த்த அவர் அதனை கம்பத்தின் வலது மூலைப்பக்கமாக உட்செலுத்தி கோலாக்கினார்.

அதனைத் தொடர்ந்து சுமார் 5 நிமிடங்களின் பின்னர் 54வது நிமிடம் காஸமிரோ தூரத்தில் இருந்து மின்னல் வேகத்தில் பந்தை உதைய அப்பந்து கம்பத்தினுள் இடது பக்கமாக நுழைய 3ஆவது கோல் ரியல் மெட்ரிட் அணிக்கு பதிவானது.

அதனை தொடர்ந்து பல்வேறான முயற்சிகள் செய்த போதும் நாப்போலி அணி எவ்விதமான கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாம் கட்டப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி சான் பவுலோவி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

அணி 1அணி 2முதல்சுற்றுஇரண்டாம்

சுற்று

போட்டி முடிவு
மான்செஸ்டர் சிட்டி மொனாக்கோபெப்ரவரி 21மார்ச்  15
ரியல் மெட்ரிட் நாப்போலிபெப்ரவரி 15மார்ச் 07(3–1)
பென்ஃபிக்கா டார்ட்மண்ட்பெப்ரவரி 14மார்ச் 08(1–0)
பேயர்ன் மியுனிச் ஆர்சனல்பெப்ரவரி 18மார்ச் 07(5–1)
போர்டோ ஜுவண்டஸ்பெப்ரவரி 22மார்ச் 14
பேயர் லெவர்க்சென் அட்லிடிகோ மெட்ரிட்பெப்ரவரி 21மார்ச் 15
பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் பார்சிலோனாபெப்ரவரி 14மார்ச் 08(4–0)
செவில்லா லெஸ்டர் சிடிபெப்ரவரி 22மார்ச் 14