இரண்டாவது பாதி கோல் மழையினால் சொலிட் அணிக்கு இலகு வெற்றி

771
Solid SC vs Java Lane SC

டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் இரண்டாவது பாதியில் கோல் மழை பொழிந்த அநுராதபுரம் சொலிட் விளையாட்டுக் கழகம் 6-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்னைய போட்டியில் ஜாவா லேன் மற்றும் சொலிட் அணிகள் முறையே ரினௌன் மற்றும் கிறிஸ்டல் பெலஸ் அணிகளுடனான போட்டியை சமநிலையில் நிறைவு செய்த நிலையிலேயே இந்தப் போட்டிக்கு முகங்கொடுத்திருந்தனர்.  

கடற்படையை வீழ்த்திய ரினௌன் DCL தரப்படுத்தலில் முதல் இடத்தில்

இரண்டாம் பாதியில் பெற்ற இரட்டை கோலினால் டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் (DCL) கடற்படை விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான ஆட்டத்தை 3-1 என்ற கோல்கள் கணக்கில் ரினௌன் விளையாட்டுக் கழகம் வெற்றி கொண்டுள்ளது……….

பெந்தகான கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியானது, இரு அணிகளுக்கும் செயற்கைப் புற்தரை கொண்ட மைதானத்தில் விளையாடும் முதல் போட்டியாக அமைந்தது.

ஆட்டம் ஆரம்பித்து 7 நிமிடங்களில் ஜாவா லேன் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை அணித் தலைவர் ரிஸ்கான் பெற்றார். பெனால்டி எல்லைக்கு சற்று தொலைவில் இருந்து அவர் உதைந்த பந்து சொலிட் தடுப்பு வீரரின் உடம்பில் பட்டு வெளியேறியது.

அதனைத் தொடர்ந்து ஜாவா லேன் அணி அடுத்தடுத்து பெற்ற இரண்டு கோணர் உதைகளையும் சொலிட் கோல் காப்பாளர் அனோஜன் பெர்னாண்டோ தடுத்தார்.   

மீண்டும் 11ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் அணிக்கு கிடைத்த கோணர் உதையை மொஹமட் ரிஸ்கான் பெற்றார். அவர் உள்ளனுப்பிய பந்தை சக வீரர் சப்ராஸ் கைஸ் ஹெடர் செய்து கோல் திசைக்கு செலுத்த, அவ்வணியின் T. ப்ரன்சிஸ் பந்தை கோலுக்குள் தட்டி கோல் கணக்கை ஆரம்பித்தார்.

தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் கிடைத்த கோணர் உதையை ரிஸ்கான் பெற்று உதைந்தார். அவர் உள்ளனுப்பிய பந்தை மாலக பெரேரா கோலுக்குள் ஹெடர் செய்கையில், அங்கிருந்த சொலிட் பின்கள வீரரால் அது மீண்டும் திசை திருப்பப்பட்டது.

27ஆவது நிமிடத்தில் சொலிட் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை தேசிய அணி வீரர் எடிசன் பிகுராடோ பெற்றார். பெனால்டி எல்லையை விட சற்று தொலைவில் வலது புறத்தில் இருந்து எடிசன் உதைந்த பந்து ஜாவா லேன் அணியின் கோலுக்குள் மிகவும் வேகமாகச் சென்றது. இதன்போது ஜாவா லேன் கோல் காப்பாளர் தம்மிக செனரத் பந்தை தடுப்பதற்கு எத்தணிக்க முன்னரே பந்து கம்பங்களுக்குள் சரணடைந்தது.

போட்டியின் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் பெனால்டி எல்லைக்குள் வைத்து ஜாவா லேன் பின்கள வீரர் பரூட் பாயிசின் கையில் பந்து பட்டமையினால் சொலிட் அணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியைப் பெற்ற கஸ்டீம் ஓஜோ தனது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

மீண்டும் போட்டியை சமப்படுத்தும் வகையில், ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் வீரரால் உள்ளனுப்பப்பட்ட பந்தை சப்ராஸ் கைஸ் ஹெடர் செய்து கோலுக்குள் செலுத்தி தமது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

முதற்பாதியுடன் இடைநிறுத்தப்பட்ட கிரிஸ்டல் பலஸ் மற்றும் பொலிஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

38ஆவது நிமிடத்தில் சொலிட் அணியின் கோல் திசைக்குள் அனுப்பப்பட்ட பந்தை ஜாவா லேன் இளம் வீரர் நவீன் ஜூட் பெற்று கோல் நோக்கி உதைகையில் சொலிட் கோல் காப்பாளர் அனோஜன் பெர்னாண்டோ அதனை பிடித்தார்.

40 நிமிடங்கள் கடந்த நிலையில், சொலிட் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை ஜாவா லேனின் பின்கள வீரர்கள் தடுக்கத் தவறினர். இதன்போது தம்மிடம் வந்த பந்தை சொலிட் அணி வீரர்கள் சிறந்த முறையில் கோல் நோக்கி உதைந்து நிறைவு செய்யாமல் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டனர்.  

முதல் பாதி: சொலிட் விளையாட்டுக் கழகம் 2 – 2 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியின் முதல் முயற்சியாக சொலிட் வீரர் செல்வனாயகம் அகீபன் மத்திய களத்தில் இருந்து வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்து கம்பங்களை விட சற்று தொலைவால் வெளியே சென்றது.

மேலும் இரண்டு நிமிடங்களில் சொலிட் வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட கோலுக்கான முயற்சி தம்மிக்க செனரத் மூலம் தடுக்கப்பட்டது.

ஆட்டத்தின் 62 ஆவது நிமிடத்தில் சொலிட் அணியின் கோல் கம்பங்களுக்கு நேரே பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து ஜாவா லேன் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை சப்ராஸ் கைஸ் பெற்றார். அவர் நேரடியாக கோல் நோக்கி உதைந்த பந்து அனோஜன் மூலம் தடுக்கப்பட, மீண்டும் தன்னிடம் வந்த பந்தை ஜானக சமிந்த கோலுக்கு உதைந்தார். எனினும் ஒரு பக்க கோல் கம்பத்தை அண்மித்த வகையில் பந்து வெளியே சென்றது.

66 ஆவது நிமிடத்தில் அபியோடன் உதைந்த பந்தை மத்திய களத்தில் இருந்து பெற்ற தேசிய அணி வீரரும் சொலிட் அணித் தலைவருமான ஞானரூபன் வினோத், பந்தை எதிரணியின் பின்கள வீரரைத் தாண்டி சத்யசீலன் சஜீவனிடம் வழங்க, அவர் எதிரணியின் கோல் எல்லை வரை பந்தை எடுத்துச் சென்று சொலிட் அணிக்கான மூன்றாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

மேலும் 3 நிமிடங்கள் கடந்த நிலையில் சொலிட் வீரர் ஓஜோ பந்தைப் பெற்று எதிரணியின் கோல் எல்லைக்குள் புகுந்து இலகுவான முறையில் சொலிட் அணிக்கான மற்றொரு கோலையும் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் 76ஆவது நிமிடம் சஜீவனின் மூலம் சொலிட் அணிக்கான மற்றொரு கோல் கிடைக்க அவ்வணி 3 கோல்களால் முன்னிலை பெற்றது.

85ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்ற ரிஸ்கான் எதிரணியின் பெனால்டி எல்லை வரை பந்தை எடுத்து வந்து கோலுக்கு அண்மையில் இருந்த நவீன் ஜூட்டிடம் பரிமாற்றம் செய்தார். எந்த ஒரு வீரரும் இல்லாமல் தனியே இருந்த நவீன் கோலுக்கள் இலகுவாக அடிக்க வேண்டிய பந்தை வெளியே அடித்து வாய்ப்பை வீணாக்கினார்.

ஹட்ரிக் கோல் மூலம் ஆர்ஜன்டீனாவின் உலகக் கிண்ண கனவை நனவாக்கிய மெஸ்ஸி

மீண்டும் 91ஆவது ஆவது நிமிடத்தில் ஞானரூபன் எடிசனுக்கு வழங்கிய பந்தை எடிசன் ஓஜோவிடம் பரிமாற்றம் செய்தார். பந்தைப் பெற்ற ஓஜோ தனது ஹெட்ரிக் கோலை பதிவு செய்தார்.

போட்டியின் இறுதி நிமிடத்தில் மாற்று வீரராக மைதானம் நுழைந்த 19 வயதின் கீழ் தேசிய அணி வீரர் சபீர் ரசூனியா மூலம் ஜாவா லேன் அணி தமக்கான மூன்றாவது கோலைப் பெற்றவுடன் ஆட்டம் நிறைவடைந்ததாய் நடுவர் தரங்க புஷ்பகுமார சைகை காண்பித்தார்.

எனவே இந்த வெற்றியின் மூலம் சொலிட் விளையாட்டுக் கழகம் இந்த பருவகால டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் தமது நான்காவது வெற்றியைப் பதிவு செய்துகொண்டது.

முழு நேரம்: சொலிட் விளையாட்டுக் கழகம் 6 – 3 ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – கஸ்டீம் ஓஜோ (சொலிட் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

சொலிட் விளையாட்டுக் கழகம் – எடிசன் பிகுராடோ 27’, கஸ்டீம் ஓஜோ 32’, 69’, 90+1’, சத்யசீலன் சஜீவன் 66’

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – T. ப்ரன்சிஸ் 11’, சப்ராஸ் கைஸ் 35’, சபீர் ரசூனியா 90+3’

மஞ்சள் அட்டை  

சொலிட் விளையாட்டுக் கழகம் – ஜூட் சுமன் 81’

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – சப்ராஸ் கைஸ் 25’