தீவிரமான உபாதையிலிருந்து தப்பிய குசல் மெண்டிஸ்

803

கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது விரல் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸின் உபாதை தீவிரமாக இல்லையென எக்ஸ்ரே பரிசோதனை முடிவுகளின் படி தெரியவந்துள்ளது.

குசல் மெண்டிஸிற்கு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை அறிக்கையின்படி, அவரது விரலில் முறிவுகளோ அல்லது பெரிய காயங்களோ இல்லையென இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் ஜெரில் வௌர்டஷ் தெரிவித்துள்ளார்.

முக்கிய வீரரை இழக்கும் அபாயத்தில் இலங்கை

இலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் அணிகளுக்கு…

குசல் மெண்டிஸின் உபாதை குறித்து கருத்து வெளியிட்ட இவர், “நாம் இன்று காலை குசல் மெண்டிஸை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தோம். எக்ஸ்ரே அறிக்கையின்படி, குசல் மெண்டிஸிற்கு தீவிரமான காயங்கள் ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும் அவரின் கையில் இன்னும் சிறிய எரிச்சல் இருப்பதால், இப்போதைய நிலையில் அவர் துடுப்பெடுத்தாடுவது சாத்தியமற்றது” என்றார்.

குசல் மெண்டிஸ் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில், டில்ருவான் பெரேராவின் ஓவருக்கு சோர்ட் லெக் (Short Leg) பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட நிலையில், ஜெக் டொரன் அடித்த பந்து வேகமாக வந்து அவரது கைவிரலை பதம் பார்த்திருந்தது. இதன் பின்னர் களத்திலிருந்து சிகிச்சைக்காக வெளியேறிய குசல் மெண்டிஸ், எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இன்றைய தினம் துடுப்பெடுத்தாடுவதற்கும் களமிறங்கவில்லை.

இதேவேளை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் நேற்றைய தினம் இரண்டு ஓவர்கள் மாத்திரம் வீசியிருந்த நிலையில், உபாதை காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார். இவர் இன்றைய தினம் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், விரைவில் இவரின் உபாதை தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் எனவும், இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க