நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்; தீர்க்கமான போட்டியில் வெற்றியீட்டிய ஆர்ஜன்டீனா

206

12 ஆண்டுகளின் பின் ஆஸி. முதல் வெற்றி

துனீசியாவை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் 12 ஆண்டுகளின் பின் முதல் வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் அதிகரித்துக்கொண்டது.

அல் ஜனூப் அரங்களில் D குழுவுக்காக சனிக்கிழமை (26) நடைபெற்ற போட்டியின் 23 ஆவது நிமிடத்தில் அய்மன் டாஹ்மன் பரிமாற்றிய பந்தை மிட்சல் டுக் தலையால் முட்டி கோல் புகுத்தி அவுஸ்திரேலியாவை முன்னிலை பெறச் செய்தார்.

அதிர்ச்சியுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் கட்டார்

தொடர்ந்து பதில் கோல் திருப்ப துனீஷியா கடுமையாகப் போராடியது. அணித் தலைவர் யூசுப் மிசக்னி அடித்த பந்து ஒன்று கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறியது.

போட்டியின் பெரும்பாலான நேரம் பந்து துனீசிய வீரர்களின் கால்களிலேயே சுழன்றபோதும் வலுவான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய பின்கள வீரர்கள் எதிரணியின் ஊடுருவலை கடைசி விநாடி வரை தடுத்தனர்.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத்தில் வெற்றி இல்லாத ஏழு போட்டிகளின் பின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் அந்த அணி 2010 ஆம் ஆண்டில் செர்பியாவுக்கு எதிரான போட்டியை வெற்றியீட்டி இருந்தது.

சவூதியை வீழ்த்தி அடுத்த சுற்றை நெருங்கியது போலந்து

சவூதி அரேபியாவுக்கு எதிரான C குழு போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய போலந்து அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.

ஆரம்பப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த சவூதி அரேபியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் அதனால் கோல் பெற முடியாமல்போனது.

தீர்க்கமான போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி வெற்றி பெறுமா?

கட்டார், கல்வி நகர அரங்கில் சனிக்கிழமை (26) நடைபெற்ற போட்டியின் 39 ஆவது நிமிடத்தில் பியொட்டர் சிலின்ஸ்கி கோல் பெற்று போலந்தை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து சவூதி அரேபியாவுக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் போலந்து கோல்காப்பாளர் வொசியச் சென்ஸ்கி அபாரமாக தடுத்தார்.

இந்நிலையில் சவூதி மத்திய கள வீரர் செய்த தவறை பயன்படுத்திக்கொண்ட ரொபர்ட் லெவன்டோஸ்கி 82 ஆவது நிமிடத்தில் போலந்துக்காக இரண்டாவது கோலை திருப்பினார். பார்சிலோனா முன்கள வீரரான லெவன்டோஸ்கி முன்னர் விளையாடிய நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் கோல் பெற தவறியிருந்தார்.

இந்த வெற்றியுடன் போலந்து அணி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற அர்ஜன்டீனாவுக்கு எதிரான கடைசி குழுநிலை போட்டியில் ஒரு புள்ளியை பெற்றால் போதுமானது.

நடப்புச் சம்பியன் முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

கைலியன் ம்பப்பேவின் இரட்டை கோல் உதவியுடன் டென்மார்க்கை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய நடப்புச் சம்பியனம் பிரான்ஸ் உலகக் கிண்ணத்தில் முதல் அணியாக நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

கட்டாரின் 974 அரங்கில் D குழுவுக்காக சனிக்கிழமை (26) நடைபெற்ற போட்டியில் 23 வயதான ம்பப்பே 61 ஆவது நிமிடத்தில் தியோ ஹெர்னன்டஸ் பரிமாற்றிய பந்தை கோலாக மாற்றினார்.

பாடசாலை கால்பந்தில் சம்பியன் பட்டம் குவித்த வடக்கு அணிகள்!

எனினும் டென்மார்க் ஏழு நிமிடங்கள் கழித்து அன்ட்ரியஸ் கிறிஸ்டன்சன் மூலம் பதில் கோல் திருப்பியது. இந்நிலையில் மீண்டும் செயற்பட்ட ம்பப்பே 86 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை புகுத்தி பிரான்ஸின் வெற்றியை உறுதி செய்தார்.

ம்பப்பே பிரான்ஸ் அணிக்காக 31 கோல்களை பெற்று அந்த அணிக்காக அதிக கோல்கள் பெற்ற சினடின் சிடேனின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

இந்த வெற்றியுடன் பிரான்ஸ் முதல் இரு போட்டிகளிலும் வென்று அறு புள்ளிகளுடன் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. D குழுவில் அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் இருப்பதோடு இன்னும் தனது முதல் வெற்றியை பதிவு செய்யாத டென்மார்க் ஒரு புள்ளியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஆர்ஜன்டீனாவின் நம்பிக்கையை தக்கவைத்தார் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸியின் தீர்க்கமான கோல் மூலம் மெக்சிகோவுடனான போட்டியில் 2-0 என வெற்றியீட்டிய ஆர்ஜன்டீன அணி உலகக் கிண்ணத்தில் இருந்து ஆரம்பத்திலேயே வெளியேறுவதைத் தவிர்த்துக் கொண்டதோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துக்கொண்டது.

லுசைலா அரங்கில் இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை நடைபெற்ற C குழுவுக்கான இந்தப்போட்டி ஆர்ஜன்டீனாவுக்கு வாழ்வா சாவா என அமைந்தது. முதல் போட்டியில் சவூதியிடம் தோற்ற ஆர்ஜன்டீனா உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது.

மல்ஷாவின் சுழல் அபாரத்தால் சம்பியனாகிய ரெட்ஸ் அணி

எனினும் முதல் பாதி ஆட்டம் பரபரப்புடன் கோலின்றி முடிவடைந்தது. இந்நிலையில் 64 ஆவது நிமிடத்தில் அன்ஜேல் டி மரியா பரிமாற்றி பந்தை பெற்ற மெஸ்ஸி மெக்சிகோ தற்காப்பு வீரர்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் 20 யார் தூரத்தில் இருந்து பந்தை உதைத்து அபார கோல் ஒன்றை பெற்றார்.

இதன் மூலம் உலகக் கிண்ணத்தில் 21 போட்டிகளில் 8 கோல்களைப் பெற்ற டியகோ மரடோனாவின் ஆர்ஜன்டீன சாதனையை அவர் சமப்படுத்தினார்.

தொடர்ந்து உத்வேகத்துடன் ஆடிய ஆர்ஜன்டீன அணிக்கு பெர்னான்டஸ் 87 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை புகுத்தி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்தப் போட்டியை காண அரங்கில் 88,966 ரசிகர்கள் கூடியிருந்ததோடு பெரும்பாலானவர்கள் ஆர்ஜன்டீன ரசிகர்களாக இருந்தனர்.

இந்த வெற்றியுடன் C குழுவில் 3 புள்ளிகளோடு இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய ஆர்ஜன்டீன அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கடைசி குழுநிலை போட்டியில் தனது குழுவில் முதலிடத்தில் உள்ள போலந்தை எதிர்கொள்ளவுள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<