பங்களாதேஷில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 12வது பங்களாதேஷ் பிரீமியர் லீக் T20 (BPL) போட்டித் தொடரில் விளையாட இலங்கை அணியின் ஏழு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படுகின்ற 2026ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்றுமுன்தினம் (30) நடைபெற்றது. இதில் இலங்கை அணியைச் சேர்ந்த 53 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதில் இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான தசுன் ஷானக்க அதிக விலைக்கு ஒப்பந்தமாகிய வெளிநாட்டு வீரராக மாறினார். அவரை அமெரிக்க டொலர் 55,000 அதாவது சுமார் 16,964,211.00 ரூபாவிற்கு டாக்கா கேபிடல்ஸ் அணி வாங்கியது.
இதற்கு முன்பு BPL போட்டிகளில் 4 அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 16 போட்டிகள் விளையாடியுள்ள தசுன் ஷானக்க, கடைசியாக 2024இல் குல்னா டைகர்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடினார்.
அவருடன் இந்த ஏலத்தில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர சகலதுறை வீரரான அஞ்சலோ மெத்யூஸை சில்ஹெட் டைட்டன்ஸ் அணியும், இடது கை துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்லவை சிட்டகொங் றோயல்ஸ் அணியும் வாங்கியது. அவர்கள் இருவருக்கும் முறையே 35,000 அமெரிக்க டொலர் அதாவது ரூபாய் கோடியை நெருங்கும் (10,795,407.00) தொகை கிடைத்துள்ளது.
>>லங்கா பிரீமியர் லீக்கிற்கான திகதிகள் அறிவிப்பு<<
ராஜ்ஷாஹி வொரியர்ஸ் அணி இலங்கையின் இளம் சுழல்பந்து வீச்சாளர் துஷான் ஹேமந்தவை அமெரிக்க டொலர் 25,000 அதாவது சுமார் 77 இலட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது. இலங்கையின் மற்றுமொரு முன்னாள் சகலதுறை வீரரான அஞ்சலோ பெரேராவை அமெரிக்க டொலர் 20,000 அதாவது சுமார் ரூபாய் 61 இலட்சத்துக்கு சிட்டகாங் றோயல்ஸ் அணி வாங்கியது.
இந்த 5 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், இலங்கை அணியின் இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஏலத்திற்கு முன் நோஹ்காலி எக்ஸ்பிரஸ் அணியுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல, வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவை ராஜ்ஷாஹி வொரியர்ஸ் அணி நேரடியாக ஒப்பந்தம் செய்தது.
இதனிடையே, இம்முறை ஏலத்தில் அதிக விலைக்கு ஒப்ப்நதம் செய்யப்பட்ட உள்நாட்டு வீரரக மொஹமட் நயீம் மாறினார். இவரை சிட்டகொங் றோயல்ஸ் அணி பங்களாதேஷ் பணத்தில் 1.1 கோடி ரூபா அதாவது 90,300 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் இம்மாதம் 23ஆம் திகதி முதல் ஜனவரி 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், 6 அணிகள் பங்கேற்கும் இம்முறை போட்டித் தொடரானது 34 போட்டிகளை உள்ளடக்கியது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















