தேசிய அணி வீரர்களின் சிகிச்சை தொடர்பில் கால்பந்து சம்மேளனத்தை சாடும் அமானுல்லா

1226
Amanulla slams FFSL

இலங்கை தேசிய கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தும்பொழுது உபாதைக்குள்ளான வீரர்களை கையாளும் விதம் குறித்து, ரினௌன் விளையாட்டுக் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் அமானுல்லா இலங்கை கால்பந்து சம்மேளனத்தை (FFSL) கடுமையாக சாடியுள்ளார். 

குறிப்பாக கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி கம்போடியாவுடனான நட்பு ரீதியான போட்டியின்போது உபாதைக்குள்ளான தனது கழக வீரர் அபாம் அக்ரம் தொடர்பில் பயிற்றுவிப்பாளம் அமானுல்லா அதிக கவனம் செலுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.

”அபாம் கடுமையான உபாதைக்கு உள்ளாகியுள்ளார். அவர் நாட்டிற்கு வந்து 2 வாரங்களின் பின்னரே அவருக்கான ஸ்கேனை எடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை” என அமானுல்லா தனது அதிருப்தியை வெளியிட்டார்.

”தாம் வீரர்கள் குறித்து கவனம் செலுத்துவதாக கால்பந்து சம்மேளனம் கூறுகின்றது. இதுவா அவர்கள் வீரர்களை கவனிக்கும் விதம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கை தேசிய கால்பந்து அணி கம்போடியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த வேளையில், இலங்கை அணியின் முன்னணி வீரர் ஜானரூபன் வினோத் முழங்கால் உபாதைக்கு உள்ளானார். அதேபோன்று கம்போடியாவுடனான போட்டிக்கு ஒரு நாள் இருக்கையில் இளம் வீரரான திலிப் பீரிசும் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த வேளை முழங்கால் உபாதைக்கு உள்ளானார்.

அதேபோன்று மற்றொரு இளம் வீரரான அபாம் அக்ரம், தனது முதலாவது சர்வதேச போட்டியான கம்போடியாவுடனான போட்டியின் முதல் பாதியில் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது உபாதைக்கு உள்ளானார்.  

கடந்த வருடமும் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த திலிப் பீரிஸ் மற்றும் அபாம் அக்ரம் ஆகியோர் இலங்கை கால்பந்தின் எதிர்கால நட்சத்திரங்களாக கருதப்படும் இருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வீரர்களின் உபாதை விடயம் குறித்து இலங்கை தேசிய கால்பந்து அணியின் முகாமையாளர் மொஹமட் ரமீஸை thepapare.com தொடர்புகொண்டு வினவியபோது, ”நாம் குறித்த வீரர்களுக்கான ஸ்கேனை செய்துள்ளோம். எனினும் அபாம் அக்ரமின் நிலைமை குறித்து மற்றொரு முறை பரிசீலனை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் ஏனைய இருவருக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

எனினும். வீரர்கள் உபாதைக்கு உள்ளாகி நீண்ட நாட்கள் சென்றும் உரிய விதத்தில் அவர்கள் கவனிக்கப்படாமை குறித்தே தற்பொழுது அதிகமாக கதைக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி U.L.ஜஸ்வர் thepapare.com இடம் கருத்து தெரிவிக்கும்பொழுது,

”வீரர்களுக்கு காப்பீடு உள்ளது. எனினும், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் ஸ்கேன் மேற்கொள்ளுதல் என்பவற்றில் ஆரம்பத்தில் உரிய முறையில் காப்பீட்டு முறைமைகள் பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாகவே தாமதம் ஏற்பட்டது. எனினும் இந்த வாரம் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

எனவே, இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் விடப்பட்ட தவறுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும் கடுமையான உபாதைகளுக்கு உள்ளான வீரர்கள் சுமார் 2 மாத காலம் எந்த சிகிச்சைகளும் பெறாமல் அவதியுற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.