வருடத்தின் முதலாவது ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான்

159

பாகிஸ்தான் அணிக்கு எதிராக புலவாயோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தின் காரணமாக ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்ததுடன், தொடரை 0-3 என இழந்தது.

முதல் இரண்டு போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணியை இலகுவாக வீழ்த்தி வெற்றிபெற்றிருந்த பாகிஸ்தான் அணி, மீண்டும் ஜிம்பாப்வே அணியை புரட்டி எடுத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். முதல் இரண்டு போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணிக்கு, பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் கொடுத்த அழுத்தம் இந்த போட்டியில் அதிகமாகவே இருந்தது. ஜுனைட் கான் மற்றும் யசீர் ஷாஹ் ஆகியோர் இன்றைய போட்டியில் இணைக்கப்பட்டமையானது அணியின் பந்து வீச்சுக்கு மேலும் பலம் சேர்த்திருந்தது.

பக்ஹர் சமானின் அசத்தல் சதத்துடன் இலகு வெற்றிபெற்ற பாகிஸ்தான்

இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலையில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி மீண்டும் துடுப்பெடுத்தாட்டத்தை தெரிவுசெய்தது. தொடரை தக்கவைக்கும் அழுத்தத்துக்கு மத்தியில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி மீண்டும் ஒருமுறை தமது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பஹீம் அஷ்ரப், ஜுனைட் கான் மற்றும் உஸ்மான் கான் ஆகியோரது வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 25.1 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஒருநாள் போட்டிகளில், ஜிம்பாப்வே அணியின் ஐந்தாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 35 ஓட்டங்களைப் பெற்றமையே ஜிம்பாப்வே அணியின் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஜிம்பாப்வே அணி 38, 44 மற்றும் 54 ஓட்டங்களுக்கும் சுருண்டுள்ளது.

இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி சார்பில், சமு சிபஹபஹா அதிகபட்சமாக 16 ஓட்டங்களை பெற, வெலிங்டன் மசகட்சா 10 ஓட்டங்களையும், ஹெமில்டன் மசகட்சா 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினர். பாகிஸ்தான் அணியின் சார்பில் வேகத்தில் மிரட்டிய பஹீம் அஷ்ரப் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதலாவது 5 விக்கெட்டுகள் பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்தார். இவருக்கு அடுத்தபடியாக ஜுனைட் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, உஸ்மான் கான், சதாப் கான் மற்றும் யசீர் ஷாஹ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகி்ஸ்தான் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. முஷரபாணி வீசிய பந்தில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக், விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி தடுமாற்றத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்த்த போதிலும், பக்ஹர் சமான் மற்றும் பாபர் அசாம் இணைந்து வெறும் 9.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினர். இதில் பக்ஹர் சமான் 24 பந்துகளில் 8 பவுண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களையும், பாபர் அசாம் 34 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 2018ஆம் ஆண்டுக்கான முதல் ஒருநாள் தொடரை கைப்பற்றிக்கொண்டது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மீதம் 2 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலும், பாகிஸ்தான் அணி 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

உலக சாதனையுடன் தொடரை வென்ற இலங்கை

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி புலவாயோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 67 (25.1) – சமு சிபஹபஹா 16(28), பஹீம் அஷ்ரப் 5/22, ஜுனைட் கான் 2/7

பாகிஸ்தான் – 69/1 (9.5) – பக்ஹர் சமான் 43(24), பாபர் அசாம் 19(34), முஷரபாணி 1/43

முடிவு – பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

 

போட்டியின் ஆட்டநாயகன் – பஹீம் அஷ்ரப்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<