அபராதத்தை எதிர்கொள்ளும் ஜிம்பாப்வே அணி வீரர்கள்

1638

ஹம்பாந்தோட்டையில் சனிக்கிழமை (8) நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் மந்த கதியில் ஓவர்களை வீசிய குற்றச்சாட்டின் பேரில் ஜிம்பாப்வே அணியானது ஐ.சி.சி இனால் அபராதம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. 

நான்காவது ஒரு நாள் போட்டியின் மத்தியஸ்தராக செயற்பட்டிருந்த கிரிஸ் ப்ரோட், கிரேம் கிரீமர் தலைமையிலான அணி அனைத்து ஓவர்களும் வீசப்பட வழங்கப்பட்டிருந்த நேர அவகாசத்திற்குள் ஒரு ஓவர் குறைவாக வீசியிருந்ததாகக் கூறி, ஜிம்பாப்வே வீரர்கள் மந்தகதியில் ஓவர்கள் வீசிய குற்றச்சாட்டினை நிரூபித்தார். 

இதன் காரணமாக, ஐ.சி.சி சட்டக்கோவைகளின் அடிப்படையில் அணித்தலைவரான கிரீமர் தனது போட்டிச் சம்பளத்தில் 20% பணத் தொகையையும், அவரது அணியின் சக வீரர்கள் அனைவரும்  தங்களது போட்டிச் சம்பளத்தில் 10% பணத் தொகையையும் அபராதமாக செலுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

அத்தோடு, கிரீமர் தலைமையிலான ஜிம்பாப்வே அணி எதிர்வரும் ஒரு வருடகாலத்திற்குள் இவ்வாறான தவறு ஒன்றினை மீண்டும் செய்யும் பட்சத்தில் அணித்தலைவர் போட்டித் தடையைப் பெறுவார் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணித் தலைவரும், அந்த அணி வீரர்களும் தங்கள் மீது நிரூபிக்கப்பட்ட குற்றத்தினை ஏற்றுக்கொண்டு தண்டப்பணம் செலுத்த முன்வந்த காரணத்தினால் மேலதிக விசாரணைகளுக்கு அவசியம் ஏதும் ஏற்படவில்லை.

ஜிம்பாப்வே அணியானது இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில், டக்வத் லூயிஸ் முறையில் நான்கு விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-2 என சமநிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.